Last Updated : 12 Mar, 2015 09:32 AM

 

Published : 12 Mar 2015 09:32 AM
Last Updated : 12 Mar 2015 09:32 AM

இந்திய தூதரக அதிகாரிகளை ரகசியமாக கண்காணிக்கும் பாகிஸ்தான் உளவுத் துறை: வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தகவல்

பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் அந்நாட்டு உளவுத் துறையால் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று வெளியுறவு அமைச்சம் சுஷ்மா ஸ்வராஜ் மக்களவையில் நேற்று தெரிவித்தார்.

வெளிநாடுகளில் இந்திய தூதரக அதிகாரிகள் அவமதிக்கப்படுவது தொடர்பாக மக்களவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சுஷ்மா ஸ்வராஜ் பதில் அளிக்கும்போது, “கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தான் உட்பட வெளிநாடுகளில் இந்திய தூதரக அதிகாரிகள் அவமதிக்கப்படும் சம்பவங்கள் நடந்துள்ளன. இவை உடனடியாக அந்தந்த நாட்டு அரசுகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகு, பாகிஸ்தானை தவிர மற்ற நாடுகளில் மீண்டும் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை.

பாகிஸ்தானில் பணியாற்றும் இந்திய தூதரக அதிகாரிகளை ரகசியமாக பின்தொடர்வது உட்பட அவர்களின் நடவடிக்கைகளை அந்நாட்டு உளவுத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்த விவகாரம் பாகிஸ்தான் அரசின் பல்வேறு நிலைகளில் கொண்டு செல்லப்பட்டு, கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஐஎப்எஸ் அதிகாரி தேவயானி கோபரகடே அவமதிக்கப்பட்டது தொடர்பாக அந்நாட்டு அரசு வருத்தம் தெரிவித்தது. தேவயானி மீதான வழக்குகளை அமெரிக்கா ரத்து செய்திட அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டுள்ளோம். இந்த வழக்குகள் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு உரிய சலுகைகள் மற்றும் சட்டப்பாதுகாப்பு தொடர்பாக இந்தியா அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது” என்றார்.

கடந்த சில ஆண்டுகளில் சால்வேனியா, ருமேனியா, அல்பேனியா மற்றும் பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் அவமதிக்கப்பட சம்பவங்களை சுஷ்மா தனது பதிலில் குறிப்பிட்டார். முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், மரபுகளுக்கு எதிராக நியூயார்க் விமான நிலையத்தில் சோதனைக்கு ஆளாக்கப்பட்டார். இதுபோல் இந்திய பிரபலங்கள் பலர் வெளிநாடுகளில் அவமதிக்கப்பட்ட சம்பவங்களையும் சுஷ்மா குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x