Last Updated : 07 Feb, 2015 08:55 AM

 

Published : 07 Feb 2015 08:55 AM
Last Updated : 07 Feb 2015 08:55 AM

டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது வாக்குப்பதிவு

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. தேர்தலையொட்டி, டெல்லி முழுவதும் 55,000 போலீஸார் உச்சகட்ட பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டின் தலைநகரான டெல்லியில் நடைபெறும் தேர்தல் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 16 ஆண்டுகளாக டெல்லியில் ஆட்சியில் இல்லாத பாஜக அங்கு ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்போடு களத்தில் இறங்கியுள்ளது. பாஜகவுக்கு ஆம் ஆத்மி கடும் சவால் அளித்து வருகிறது.

கடந்த 2013 டிசம்பர் வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியை ஆட்சி செய்த காங்கிரஸ், கருத்துக் கணிப்பில் 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

பாஜக, கிரண்பேடியை முதல்வர் வேட்பாளராகக் களமிறக்கியுள்ளது. பாஜகவின் இந்த உத்தியை, ‘வெற்றி பெற்றால் மோடி அலை, தோற்றால் கிரண்பேடியை பலிகடா ஆக்கும் முயற்சி’ என்று ஆம் ஆத்மி விமர்சித்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 10 மாத பாஜக ஆட்சிக்கு மக்கள் அளிக்கும் மதிப்பெண்ணாக இத்தேர்தல் இருக்கும் என்ற கருத்தை பாஜக நிராகரித்துள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலை மோடியின் திறமை அல்லது பாஜக தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடு மீதான வாக்கெடுப் பாகக் கருதத் தேவையில்லை என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். இதே கருத்தை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.

இருமுனைப் போட்டி

இத்தேர்தல் பாஜக - ஆம் ஆத்மி இடையேயான இருமுனைப் போட்டியாகவே கருதப்படுகிறது. சில கருத்துக் கணிப்புகள் ஆம் ஆத்மி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்றும், சில கருத்துக் கணிப்புகள் பாஜக ஆட்சியமைக்கும் என்றும் கூறியுள்ளன. காங்கிரஸ் தனது தோல்விகளிலிருந்து மீண்டு ஆசுவாசப்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்குமா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 673 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். 1.33 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். மொத்தமுள்ள 12,177 வாக்குப்பதிவு மையங்களில், 714 மையங்கள் பதற்றமானவையாகவும், 191 மையங்கள் அதிக பதற்றமானவையாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய ரிசர்வ் போலீஸாருடன் இணைந்து 55,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சாலைகள், வாக்குப் பதிவு மையங்களில் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். வரும் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x