Published : 22 Feb 2015 01:48 PM
Last Updated : 22 Feb 2015 01:48 PM

கட்சி அறிக்கையில் சரமாரி புகார் எதிரொலி: மார்க்சிஸ்ட் மாநாட்டில் இருந்து அச்சுதானந்தன் வெளிநடப்பு

கேரளத்தில் நடக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த அவர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரள மார்க்சிஸ்ட் கட்சியில் செயலாளர் பினராய் விஜயனுக்கும், முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்கும் இடையில் பகிரங்கமான கருத்து மோதல் நிலவுகிறது. இதில் கட்சியில் பினராய் கை தற்போது ஓங்கி உள்ளது. இந்நிலையில் 4 நாட்கள் நடக்கும் மார்க்சிஸ்ட் மாநில மாநாடு நேற்றுமுன்தினம் ஆலப்புழையில் தொடங்கியது. கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.

இரண்டாம் நாள் மாநாடு நேற்று காலை தொடங்கியது. அப்போது கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் செயல்பாடுகள் குறித்த 50 பக்க அறிக்கையை செயலாளர் பினராய் விஜயன் சமர்ப்பித்தார். அதில் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மீது சரமாரியாக புகார் கூறப்பட்டிருந்தது. கட்சி கட்டுப்பாடுகளை மீறி செயல்படுகிறார். கட்சி விரோத சக்திகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்ற ரீதியில் புகார்கள் இருந்தன.

மாநாட்டில் அறிக்கை சமர்ப்பித்தபோது, அச்சுதானந்தனும் அங்கு இருந்தார். சரமாரியான குற்றச்சாட்டுகளால் அதிருப்தி அடைந்த அவர், திடீரென மாநாட்டில் இருந்து வெளிநடப்பு செய்தார். பேட்டி காண்பதற்காக அவரை செய்தியாளர்கள் பின் தொடர்ந்தனர். ஆனால், யாரிடமும் பேசாமல் ஆலப்புழை அருகில் புன்னபரா என்ற இடத்தில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று விட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் அச்சுதானந்தனின் ஆதரவாளர்கள் அவருடைய வீட்டுக்கு வெளியில் கூடி ஆதரவு கோஷங்கள் எழுப்பினர்.

மாநாட்டின் முதல் நாளிலேயே அச்சுதானந்தனுக்கு எதிராக பினராய் விஜயன் மறைமுகமாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். அதன்பிறகு அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அச்சுதானந்தன் பேசினார்.

கட்சியின் பினராயின் செல்வாக்கு அதிகரித்து வருவதும் அச்சுதானந்தனுக்கு செல்வாக்கு குறைந்துள்ளதும்தான் இரு தலைவர்களின் மோதலுக்கு காரணம் என்று மார்க்சிஸ்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.-ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x