

டெல்லியில் தேவாலயங்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி மவுனமாக இருந்து வருவதைக் கண்டித்து கிறிஸ்தவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதிரியார்கள், முதியோர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மத்திய டெல்லியில் உள்ள சேக்ரட் ஹார்ட் கதீட்ரல் பகுதியில் நேற்று காலையில் கூடினர். பின்னர் அங்கிருந்து உயர் பாதுகாப்பு மிக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் வீட்டை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
அப்போது, தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தேவாலயங்களுக்கு அரசு பாதுகாப்பு தர வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து டெல்லி காவல் துறை இணை ஆணையர் முகேஷ் மீனா கூறும்போது, “தேவாலயத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அனுமதி பெறவில்லை.
மேலும் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அனுமதிக்க முடியாது என்பதால் போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களை நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றோம்” என்றார்.