Published : 26 Feb 2015 09:51 PM
Last Updated : 26 Feb 2015 09:51 PM

உலகின் 18 சதவீத உயிர்கொல்லிப் பறவைகளுக்கு இந்தியாவே வாழிடம்

106 வகையான உயிர்கொல்லிப் பறவை இனங்களுக்கு இந்தியாவே வாழிடமாகத் திகழ்கிறது. அவைகள் கொன்றுதின்னும் பறவைகள் என்றே பரவலாக அறியப்படுவதாக இந்திய விலங்கியல் ஆய்வகம் அண்மைய வெளியீடு தெரிவிக்கிறது.

உலகம் முழுவதும் காணப்படும் 572 வகையான உயிர்க்கொல்லிப் பறவையினங்களில் இந்தியாவில் உள்ள 18 சதவீதத்திற்கும் மேல் உள்ள பறவைகளைப் பற்றி இந்த நூல் ஆய்வு செய்கிறது.

இந்திய விலங்கியல் ஆய்வக இயக்குநர் கே.வேங்கடராமன் தி இந்து(ஆங்கிலம்)விடம் கூறும்போது, காட்டில் மட்டுமே காணப்படக்கூடிய இந்த உயிர்கொல்லிப் பறவைகள் சுற்றுச்சூழல் சுகாதாரத்திற்கான வானிலை முன்னறிவிக்கும் காற்றழுத்தமாணியாகவும் விளங்குகின்றன.

முக்கியமான சூழலியல் பங்காற்றி சமநிலையைத்தக்கவைக்கும் பணியை இப்பறவைகள் செய்கின்றன. குறிப்பாக கொறித்துத்தின்னும் பிராணிகளையும் மற்ற சிறியவகை பாலூட்டிகளின் பெருக்கங்களை கட்டுப்படுத்தும் வேலையைச் செய்கிறது என்றார்.

இவற்றில் பகலிரவுகளில் பறக்கும் டையூர்னல், இரவில் மட்டுமே பறக்கும் நோக்டியூர்னல் ஆகிய இரண்டு வகையான பறவைகள் முதன்மையானவையாகக் கருதப்படுகின்றன. இதில் பகலிரவு பறவையான டையூர்னல் பறவைகள் மட்டும 333 வகைகளாக உலகம் முழுவதும் காணப்படுகின்றன. அவற்றில் 101 விதமான பறவையினங்கள் இந்தோ-மலேயா மண்டலத்தில் காணப்படுகின்றன.

இந்தியாவின் உயிர்புவியியல் மண்டலங்களில் வல்லூறுகள், கழுகுகள், காற்றாடிப் பறவைகள், ஹாரியெர் எனப்படும் பூனைப்பருந்துகள், கருடன்கள், பஸார்ட் எனப்படும பருந்துகள் மற்றும் ஃபால்கான்ஸ் எனப்படும் ராஜாளி வகை என 69 வகையான பறவைகள் பல்வேறுவிதமான வாழிடங்களில் வாழும் சூழலைக்கொண்டுள்ளன.

இதில் 59 சதவீதப் பறவைகள் நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கியிருப்பவை; 16 சதவீதம் இடம்பெயரக்கூடியவை; 5 சதவீதம் அலைந்துதிரிபவை; 19 சதவீதம் நிரந்தரமாகவும் இடம்பெயர்பவனாகவும் இருப்பவையாகும். கூடுதலாக, இரவில் மட்டும் வாழும் 32 வகையான ஆந்தைகள் இந்தியாவில் வாழ்கின்றன. இவை பற்றிய குறைந்த அளவே ஆய்வு நிகழ்த்தப்பட்டுள்ளன எனவும் Raptors of India என்ற இந்நூல் தெரிவிக்கிறது.

இந்த உயிர்க்கொல்லிப் பறவைகளுக்கிடையே இந்திய வெள்ளைமுதுகு கழுகு (White-backed Vulture), லாங் பில்டு கழுகு (Long Billed Vulture), ஸ்லெண்டர் பில்டு கழுகு (Slender Billed Vulture), சிகப்புத்தலை கழுகு மற்றும் காட்டு ஆந்தை ஆகியன அருகிவரும் பறவையினங்களின் வகைப்பாட்டில் இடம்பெற்றுள்ளன.

இது தவிர, எகிப்தியன் கழுகு மற்றும் சாக்கெர் எனப்படும் பெண் வல்லூறுகள் ஆகியனவும், அருகிவரும் பறவைகளை பட்டியலிட்டுள்ள சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் ரெட் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.

அரிதாக காணப்படும் உயிர்க்கொல்லிப் பறவையினங்களில் அந்தமான் சர்ப்பக் கழுகு, கிரேட் நிகோபர் சர்ப்பக் கழுகு போன்ற சில வியப்பூட்டும் வகைகள் முறையே அந்தமான் மற்றும் கிரேட் நிகோபர் தீவுகளில் காணப்படுகின்றன. மேலும் அமூர் ஃபால்கான், பஃப்பி மீன் ஆந்தை, பெரிய புள்ளிக்கழுகு மற்றும் சீனக்குருவி பருந்து ஆகியன பற்றியும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x