Published : 12 Feb 2015 12:46 pm

Updated : 16 Feb 2015 17:16 pm

 

Published : 12 Feb 2015 12:46 PM
Last Updated : 16 Feb 2015 05:16 PM

தெய்வத்தின் குரல்: தூது போன தூதுவளை

தாம் பண்ணப்போகிற யகஞத்துக்குப் பரமேச்வரனை யார் மூலம் வரவழைக்கலாம் என்று பார்த்துக்கொண்டிருந்த சோமாசிமாறர், சுந்தரமூர்த்தி சுவாமிகளைப் பற்றித் தெரிந்துகொண்ட பிறகு அவரைப் பிடித்தே காரியத்தை நடத்திக்கொள்ளலாமென்று தீர்மானம் பண்ணினார்.

ஆனால் அவரைப் பிடிப்பதும் அப்படி லேசான காரியமாக இருந்துவிடவில்லை. ஏனென்றால் அவரைச் சுற்றி எப்போது பார்த்தாலும் சிவனடியார்களும், ஜனங்களுமாக ஜே ஜே என்று கூட்டமாக இருக்கும். ராஜா மாதிரி ஒரு பெரிய தர்பார் - சிவ பக்தி தர்பார்- அவர் நடத்தி வந்தார்.


அவருக்கு மூவேந்தர்களுமே, அதிலும் சிறப்பாக சேர ராஜா, நெருங்கிய பக்தர்களாக இருந்தார்கள். மூவேந்தர்களும் புடைசூழக்கூட அவர் சில பாண்டி நாட்டுத் தலங்களுக்குப் போயிருக்கிறார். ஆகையால் அவரும் ஒரு ராஜா மாதிரியே அலங்காராதிகளுடன் பரிவாரம் சூழ இருந்தார்.

'யாரோ ஒரு ஏழை பிராம்மணனான தான் அவரை எப்படி நெருங்குவது? அவர் கவனத்தை எப்படிக் கவர்வது? என்று சோமாசிமாறர் யோசித்தார். 'தம்மால் என்ன பெரிய காணிக்கை, சம்பாவனை சமர்ப்பித்து அவருடைய கவனத்தைப் பெற முடியும்?' என்று யோசனை பண்ணினார். சட்டென்று அவருக்கு ஒரு யுக்தி தோன்றிற்று.

அவர் அக்னிஹோத்ராதி கர்மாக்கள் எல்லாம் கிரமப்படி செய்துவிட்டு மத்தியானம் ஒரு மணிக்கு மேலே தான் போஜனம் பண்ணுவார்.

யாருக்கும் எந்தத் தொந்தரவுமில்லாமல், தானம் தக்ஷிணை என்றுகூட யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல், அவர் பாட்டுக்குப் பஞ்சாக்ஷரத்தை ஜபித்துக்கொண்டே ஆற்றங்கரையோடு போய், கேட்பாரில்லாமல் ஒதுக்குப் புறத்தில் முளைத்திருக்கிற கீரை முதலானதுகளைப் பறித்துக்கொண்டு வந்து பத்னியிடம் கொடுத்தே பாகம் (சமையல்) பண்ணி வைக்கச் சொல்வார்.

ஊரானைப் பிடுங்கித் தின்கிறதில்லை. ஊருக்கு ஒதுக்குப் புறத்துக் கீரையைத்தான் பிடுங்கித் தின்கிறது. அதனால் அவருக்கு இப்போது என்ன நினைவு வந்ததென்றால், 'நாம் சமர்ப்பணம் பண்ணுவதற்கு வேறே பெரிய காணிக்கை இல்லாவிட்டால் என்ன? நம் ஆற்றங்கரையிலே எங்கேயுமில்லாத விசேஷமாக ரொம்ப உசந்த ஜாதி தூதுவிளங்கீரை (தூதுவளை அல்லது தூதுளை என்கிற கீரை) யதேஷ்டமாக விளைகிறதே.

அது தேக ஆரோக்யத்தோடு ஞானத்தையும் விருத்தி பண்ணக்கூடியது என்று சொல்கிறார்களே. ஆகையினாலே பச்சுப் பச்சென்று அதை நித்தியமும் பறித்தெடுத்துக்கொண்டு போய் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் கிருகத்தில் சேர்ப்பித்து அவருடைய ஆகாரத்தில் சேர்க்கும்படிப் பண்ணிவிட்டால், என்றைக்காவது ஒரு நாள் அவர், யார் நித்யமும் இப்படி கீரை கொண்டு வந்து தருகிறது?' என்று கேட்டுத் தெரிந்துகொண்டு பேட்டி கொடுக்க மாட்டாரோ?' என்று எண்ணினார். தூதுவிளங்கீரை மூலமாக சூட்சுமமாக ஒரு தூது அனுப்பி சுந்தர மூர்த்தி சுவாமிகளின் கவனத்தைக் கவர யுக்தி பண்ணிவிட்டார்.

யுக்தியாக மட்டும் பண்ணவில்லை, பக்தியோடுந்தான் பண்ணினார். 'அவர் கீரையைக் கவனிக்காவிட்டால் கூடப் போகட்டும். அந்தப் புண்யாத்மா குஷியில் நித்யமும் நம்முடைய நிவேதனம் போனாலே போதும். நாம் பாட்டுக்குக் quiet -ஆகக் கொடுத்துக் கொண்டேயிருப்போம். நடக்கிறது நடக்கட்டும்' என்று முடிவு பண்ணினார்.

தினமும் சிரமத்தைப் பார்க்காமல் திருவாரூருக்குப் போய் தூதுவளை கொடுக்க ஆரம்பித்தார். சுந்தரமூர்த்தி பரவை நாச்சியார் வீட்டில் வாசம் பண்ணிக்கொண்டிருந்தார். அங்கே வருகிறவர்களும் போகிறவர்களுமாக திருவிழா மாதிரியே எப்பவும் இருக்கும்.

அந்த அமர்க்களத்தில் சோமாசிமாறர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இருந்த பக்கமே போவதில்லை. அவர் பாட்டுக்கு ஓசைப்படாமல் சமையற்கட்டுக்குப் போய் பரிசாரகர்களிடம் கீரையைக் கொடுத்துவிட்டுப் போய்விடுவார்.

'யாரோ பிராம்மணர், இத்தனை அக்கறையாக ஒரு நாளைப் போலக்கொண்டு வந்து தருகிறாரே' என்று பரவை நாச்சியார் பரிவாக நினைத்துக்கொண்டு அதை சுந்தரமூர்த்தியின் ஆகாரத்தில் சேரும்படியாக ஏற்பாடு பண்ணிக்கொண்டிருந்தாள். ஆனாலும் அந்த பிராம்மணரை பற்றிப் பதியிடம் சொல்ல அவளுக்கு அவகாசம் கிடைக்கவில்லை.

பெரிய பந்தியாக சிவனடியார்களோடு சேர்ந்துதான் சுந்தரமூர்த்தி சுவாமிகள் போஜனம் பண்ணுவார். ஒன்று, போஜனம் மௌனமாக சிவ தியானத்தோடேயே பண்ணுவார். இல்லாவிட்டால் ஈச்வர மகிமைகளை அடியார்களோடு பரிமாறிக்கொண்டே, தமக்குப் பரிமாறப்படும் அன்னத்தை புசிப்பார்.

போஜனம் ஆன பிற்பாடும் நாம கீர்த்தனம், தியானம், ஆலய தரிசனம், இவரே புதிது புதிதாகத் தேவாரம் பாடுவது என்று நடந்து வந்ததால் கீரையைப் பற்றி அவர் தனி கவனத்தோடு விசாரிக்க இடமேற்படவில்லை.

நாள் ஓடிக்கொண்டேயிருந்தது. சோமாசிமாறரும் மனந்தளராமல், கால்வலி பார்க்காமல் தினமும் கீரைக் கைங்கர்யம் பண்ணிக்கொண்டே வந்தார். அப்புறம் என்ன ஆச்சு என்றால், அவர் வருகிற வழியில் ஆற்றில் பெரிசாக வெள்ளம் வந்துவிட்டது.

ஈச்வரன் இப்படி விக்னம் மாதிரிக் காட்டியதிலேயேதான் அவருடையே பிரச்னையைத் தீர்ப்பதற்கு வழி வைத்திருந்தான். இப்படி விளையாடுவதுதான் அவன் வழக்கம்.

அங்கே, திருவாரூரில், நாலஞ்சு நாள் சேர்ந்தாற் போல தூதுவளை போஜனத்தில் சேராததை சுந்தரமூர்த்தி குறிப்பாக கவனித்துவிட்டார். விசாரித்ததில் எவரோ பிராமணர் எங்கேயிருந்தோ தினந்தினம் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்த கீரை நின்று போயிருப்பதைப் பரவை நாச்சியார் சொன்னாள்.

இவரைப் பார்ப்போமா, பார்ப்போமா என்று அவர் தவித்துக்கொண்டிருந்த மாதிரியே அவரைப் பார்ப்போமா என்று இவர் தவிக்க ஆரம்பித்துவிட்டார். இதுதான் ஈச்வரன் செய்யும் விளையாட்டு.

“பரமேச்வரன் நேரிலே வந்து உம்மிடம் ஹவிஸ் வாங்கிக்கொள்வதென்பது சாமான்ய விஷயமில்லை. என்னால் அதை முடித்துத் தர முடியுமா என்று தெரியவில்லை.

ஆனாலும் உம்ம கீரை இந்த உடம்பில் நிறையச் சேர்ந்துவிட்டதால், என்னால் முடிந்தது, சொல்லிப் பார்க்கிறேன். செய்கிறதும் செய்யாததும் சுவாமி இஷ்டம். தப்பாக நினைச்சுக்கப்படாது” என்று சுந்தரர் முடித்துவிட்டார்.

தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

தெய்வத்தின் குரல்தூது போன வளைதொடர்மகா பெரியவா

You May Like

More From This Category

More From this Author