Published : 23 Feb 2015 09:11 AM
Last Updated : 23 Feb 2015 09:11 AM

நாமக்கல் அருகே வியாபாரி வீட்டில் 150 பவுன், 1 கிலோ வெள்ளி கொள்ளை: இரு தினங்களில் திருடர்கள் 400 பவுன் கைவரிசை

நாமக்கல் அருகே கிழங்கு புரோக்கர் வீட்டில், பட்டப்பகலில் பூட்டை உடைத்து 150 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் மற்றும் ஒரு கிலோ வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தையும் சேர்த்து தமிழகத்தில் கடந்த இரு தினங்களில் சுமார் 400 பவுன் நகை கொள்ளை போயுள்ளதால், பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

நாமக்கல் அடுத்த களங்காணியைச் சேர்ந்தவர் கிழங்கு புரோக்கர் ராஜாராம் (50). இவர் நேற்று காலை தனது மனைவி செல்வலட்சுமியுடன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் காலை 9.30 மணி அளவில் இருவரும் வீட்டுக்கு வந்தனர்.

அப்போது, வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த ராஜாராமும் அவரது மனைவியும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 150 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

காரில் இருந்த 100 பவுன் நகை திருட்டு

கோவை, காளப்பட்டி அருகேயுள்ள வெள்ளானைப்பட்டியை சேர்ந்தவர் சரவணக்குமார் (27). இவரது சகோதரி வளர்மதி (30). இருவரும் கோவையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.

கோவை, அவிநாசி சாலை, தொட்டிபாளையம் பிரிவு அருகேயுள்ள பாரத ஸ்டேட் பாங்க் கிளைக்கு நேற்றுமுன்தினம் இருவரும் சென்றனர். அங்கு, ஏற்கெனவே வங்கியில் வைக்கப்பட்டிருந்த 150 பவுன் தங்க நகைகளை பணம் செலுத்தி மீட்டுள்ளனர். பின்னர், அதில் 50 பவுன் தங்க நகைகளை மீண்டும் வங்கியில் அடகு வைத்து ரூ. 6 லட்சம் பெற்றுள்ளனர்.

தொடர்ந்து, 100 பவுன் தங்க நகைகளை மடிக்கணினி பையிலும், ரூ.6 லட்சம் ரொக்கத்தை மற்றொரு பையிலும் வைத்துள்ளனர். பணம் இருந்த பையில் நில ஆவணங்கள், பாஸ்போர்ட் உள்ளிட்டவை இருந்துள்ளன.

வங்கியிலிருந்து புறப்பட்டு அவிநாசி சாலை, பாஸ்போர்ட் அலுவலகம் எதிரில் உள்ள ஹோட்டல் அருகே காரை நிறுத்தி சாப்பிடச் சென்றுள்ளனர். நகை மற்றும் பணம் வைக்கப்பட்டிருந்த பைகள் காருக்குள் இருந்துள்ளன. திரும்பி வந்து பார்த்தபோது, காரில் வைக்கப்பட்டிருந்த இரு பைகளும் காணாமல் போயிருந்தன. இது குறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில், பீளமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த திருட்டு குறித்து விசாரணை நடத்த 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே பகுதி மற்றும் அவிநாசி சாலையில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமிராவில் பதிவாகியுள்ள விவரங்களை போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

வண்டலூர் சிங்காரதேவி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர், நேற்று முன்தினம் மாலை தனது வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்குச் சென்றார். பின்னர், நேற்று அவர் வீடு திரும்பியபோது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டார்.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 12 பவுன் நகைகளை யாரோ திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. ஓட்டேரி போலீஸார் விசாரிக்கின்றனர்.

திருவண்ணாமலை குமரக்கோயில் தெருவில் வசிப்பவர் புளி வியாபாரி ரவிசங்கர். இவரது மனைவி லலிதா, நேற்று முன்தினம் கணவரின் கடைக்கு சென்றிருந்தார். அப்போது அவருடைய மகள் சுவேதா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். வீட்டில் மரவேலை செய்வதாக வந்த 2 பேர் சுவேளதாவை கட்டிப்போட்டுவிட்டு பீரோவில் இருந்த 70 பவுன் நகை மற்றும் 8 கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றதாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

வாணியம்பாடி புதூர் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (37). இவர் நேற்று முன்தினம் மாலை தனது உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க குடும்பத்தாருடன் சென்றுள்ளார். இரவு 10 மணிக்கு வீடு திரும்பியபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. யாரோ மர்ம நபர்கள் வீடு புகுந்து, 5 பவுன் நகை, அரை கிலோ வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள ஜக்கம்பட்டியைச் சேர்ந்தவர் கணபதி. இவர் வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.

நேற்று மாலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 19 பவுன் நகை, வீட்டில் இருந்து டிவிடி பிளேயர், வீடியோ கேமரா ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x