Last Updated : 04 Feb, 2015 12:49 PM

 

Published : 04 Feb 2015 12:49 PM
Last Updated : 04 Feb 2015 12:49 PM

டெல்லி பிரச்சாரத்தில் கண்ணீர் சிந்தி உருகிய இரும்புப் பெண் கிரண் பேடி

டெல்லியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி கண்ணீர் சிந்தியதோடு வாக்காளர்களிடம் உருக்கமாக பேசினார்.

டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், டெல்லி கிருஷ்ணநகர் தொகுதியில் இன்று கிரண் பேடி பிரச்சாரம் மேற்கொண்டார். முதல் முறையாக தேர்தல் களம் காணும் அவருக்கு வழி நெடுகிலும் கூடியிருந்த மக்கள் ஏகோபித்த ஆதரவு தெரிவித்ததாக தெரிகிறது.

அப்போது சிலர் கிரண் பேடிக்கு பிளாஸ்குகளில் தேநீர் கொண்டு வந்து கொடுத்திருக்கின்றனர். இதனைக் கண்ட கிரண் பேடி நெகிழ்ச்சியடைந்தார்.

கண்களில் நிரம்பிய கண்ணீரை துடைத்தபடி அவர் பேசியதாவது, "மக்களின் பேரன்பையும், ஆதரவையும் கண்டு என மனம் நெகிழ்ந்து போனது. இந்த அன்பை நிச்சயம் நான் உங்களுக்கு திருப்பி அளிப்பேன். உங்கள் மேலான அன்பை என்றைக்கும் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் நடந்து கொள்வேன். டெல்லியில், நேர்மையுடன் ஆட்சி செலுத்துவேன்" என்றார். இரும்புப் பெண் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் கிரண் பேடி கலங்கியது வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்தது.

அதேவேளையில், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்தார்.

"போலி நிறுவனங்கள் மூலம் ஆம் ஆத்மி கட்சி நிதி பெற்றுள்ளது. இதில் அக்கட்சியும் அதன் தலைவர்களும் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர்" என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த கேஜ்ரிவால், "என் மீது குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் கைதாக தயார்" என கூறியிருந்தார்.

இவற்றைக் குறிப்பிட்டுப் பேசிய கிரண் பேடி, "எப்படியாவது தொலைக்காட்சி செய்திகளில் இடம் பெற வேண்டும் என்பதற்காக அர்விந்த் கேக்ரிவால் இதுபோன்ற செய்கைகளில் ஈடுபடுகிறார்" என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x