

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்ப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, "நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சில திருத்தங்கள் ஏற்புடையதல்ல. நிலத்தை விவசாயிகளிடம் கையகப்படுத்த ஒப்புதல் பெறுதல், நிலம் கையகப்படுத்துவதால் ஏற்படும் சமூக தாக்கங்களை மதிப்பிடுதல் போன்றவை தொடர்பான உட்பிரிவுகளை மத்திய அரசு நீக்கியிருப்பது விவசாயிகள் நலனுக்கு எதிரானது.
எனவே தேசியவாத காங்கிரஸ் கட்சி இந்த மசோதாவை எதிர்க்கிறது. அதேபோல், கையகப்படுத்தப்படும் நிலத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாகவும் எந்த ஒரு திட்டமும் நிறைவேற்றாவிட்டால் அந்த நிலத்தை உரியவர்களிடமே திருப்பிக் கொடுக்கும் வகையில் இருந்த சட்ட உட்பிரிவையும் தற்போதைய அரசு நீக்கியுள்ளது. இந்த மூன்று முக்கிய அம்சங்களை நீக்கியதற்காகவே தேசியவாத காங்கிரஸ் கட்சி நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்க்கிறது” என்றார் சரத் பவார்.