

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்கும் பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சார்க் நாட்டுத் தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து மோடி தனது ட்விட்டரில், "ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் சிறிசேனா ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன்.
உலகக் கோப்பைக் கிரிக்கெட்டில் இந்நாட்டு வீரர்கள் கலந்து கொள்வதால் எனது வாழ்த்துகளை தெரிவித்தேன். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் விளையாட்டு வீரர்களின் உத்வேகத்தை போற்றுவதாகவும் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாகவும் இருக்கும் என நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.
சார்க் யாத்திரை:
சார்க் நாடுகளுடனான நட்புறவை மேம்படுத்தும் வகையில் வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர் விரைவில் 'சார்க் யாத்திரை' மேற்கொள்வார் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இந்தியாவுக்கான பாகிஸ்தான் துணை தூதர் அப்துல் பாசித் டெல்லியில் நேற்று வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டரில், "சார்க் நாடுகளுடனான நட்புறவை மேம்படுத்தும் வகையில் வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர் விரைவில் 'சார்க் யாத்திரை' மேற்கொள்வார்" என இன்று கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெறவிருந்த வெளியுறவுச் செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை ரத்தானது. காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களை பாகிஸ்தான் தூதர் சந்தித்துப் பேசியதையடுத்து பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.
அதன் பிறகு பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இந்நிலையில், சார்க் நாடுகளுக்கு வெளியுறவுச் செயலர் பயணம் மேற்கொள்வார் என்ற தகவல் இருநாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைக்கு வித்திடும் எனக் கூறப்படுகிறது.