Published : 27 Feb 2015 08:39 PM
Last Updated : 27 Feb 2015 08:39 PM

முதல்வர் ஓபிஎஸ். வீட்டை முற்றுகையிட்ட நீதித்துறை தற்காலிக பணியாளர்கள்

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை தட்டச்சர்கள், சுருக்கெழுத்து தட்டச்சர்கள், இளநிலை உதவியாளர்கள் உள்ளிட்ட நீதித்துறை தற்காலிக பணியாளர்கள் 150 பேர் முற்றுகையிட்டனர்.

முற்றுகையிட்ட நீதித்துறை தற்காலிக பணியாளர்களுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இது குறித்து நீதித்துறை தற்காலிகப் பணியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' தமிழ்நாடு நீதித்துறையில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களாகிய நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும்படி கடந்த 9.1.2015 அன்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம் மனு கொடுத்தோம்.

அதைப் பரிசீலித்த முதல்வர் தமிழ்நாடு முழுவதும் உள்ள தற்காலிக ஊழியர்கள் பெயர்ப் பட்டியலுடன் சந்திக்குமாறு அறிவுறுத்தினார்.

ஆனால், முதல்வரை சந்தித்த ஒரு மாத வேளையில் தற்காலிக ஊழியர்கள் பலர் வேலையை விட்டு நிறுத்தப்படுவதற்கான சூழல் ஏற்பட்டது. சிலர் நிறுத்தப்பட்டுள்ளனர். இன்னும் பலர் விரைவில் நிறுத்தப்பட உள்ளதாக நீதித்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றங்களில் தற்காலிக தட்டச்சர்கள், சுருக்கெழுத்து தட்டச்சர்கள் மற்றும் இளநிலை உதவியாளார்கள் என கடந்த 2009ம் ஆண்டு முதல் 758 பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறோம். இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் வாயிலாக வரும் பணியாளர்களை எங்களது பணியிடங்களில் நிரப்பப்படும்போது, எங்களுக்குக் கிடைத்த இந்த தற்காலிக பணியிலிருந்து நாங்கள் பணி நீக்கம் செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு எழுதி தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்கள் பணியில் சேர மாவட்ட நீதிபதியால் அழைக்கப்பட்டு நாங்கள் பணியிலிருந்து நிறுத்தப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பலமுறை ஜெயலலிதா அவர்களிம் தனிப் பிரிவிலும், சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அவர்களிடமும் பலமுறை நேரில் சந்தித்து மனுக்கள் கொடுத்தோம். ஆனாலும், நாங்கள் பணியிலிருந்து நிற்கும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

எங்களது குடும்பங்கள் இந்த வேலையை நம்பிதான் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. இந்த வேலையின் மூலம் கிடைக்கும் சிறிய சம்பளத்தை வைத்துதான் எங்களுடைய அன்றாட வாழ்க்கையும், எங்களது பிள்ளைகளுடைய வருங்கால படிப்பு மற்றும் திருமண செலவினையும் எதிர்கொள்ளும் நிலையில் நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

எனவே, எங்களது குடும்ப சூழ்நிலை, வயது, நீதித்துறையில் எங்களுக்கு உள்ள அனுபவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பரிசீலனை செய்து, ஒரு சிறப்புத் தேர்வினை நடத்தி, எங்கள் வாழ்வாதாரத்துக்கு நிரந்தர வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிரோம்'' என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x