

பெங்களூரில் 64 குழந்தை தொழிலாளர்கள் தன்னார்வ தொண்டு நிறுவன உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கர்நாடகா மாநிலம் தேவராஜீவனஹள்ளி எனும் இடத்தில் தோல் பை தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிகளவில் இயங்குகின்றன.
இங்குள்ள தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதாக தொடர்ந்து புகார் எழுந்தது இதனையடுத்து மாநில தொழிலாளர் துறை அதிகாரிகள், குற்றவியல் பிரிவு அதிகாரிகள் அதிரடி ரெய்டு மேற்கொண்டனர். இந்த அதிரடி சோதனைக்கு இணை ஆணையர் ஹேமந்த் நிம்பல்கர் தலைமை வகித்தார்.
64 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். இவர்களில் 11 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள், மற்றவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மீட்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் 14 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்கள்.
குழந்தைகளது அடிப்படை உரிமைகளை பறித்து சட்டவிரோதமாக அவர்களை பணியமர்த்தியது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.