Published : 06 Feb 2015 02:52 PM
Last Updated : 06 Feb 2015 02:52 PM

2015-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: பிப்.17-ல் சட்டப் பேரவை கூடுகிறது - ஆளுநர் உரையுடன் தொடக்கம்

தமிழக சட்டப் பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர், ஆளுநர் உரையுடன் வரும் 17-ம் தேதி தொடங்குகிறது.அரசின் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்பதால், ஆளுநர் உரை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.கூட்டத்தொடர் 3 அல்லது 5 நாட்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டப் பேரவையில் ஆண்டுதோறும் ஆளுநர் உரைக்கான கூட்டம், பட்ஜெட் கூட்டம், குளிர்காலக் கூட்டம் ஆகியவை குறிப்பிட்ட கால இடைவெளியில் நடைபெறும். சில முக்கியமான பிரச்சினைகளுக்கு சிறப்புக் கூட்டங்கள் நடத்தப்படும்.

சட்டப் பேரவையின் 2015-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் பிப்ரவரி 17-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.45 மணிக்கு தொடங்கும் என தமிழக சட்டப் பேரவைச் செயலர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் அறிவித்துள்ளார். ஆளுநர் பரிந்துரையின் பேரில் இந்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், அவை மரபுப்படி, தமிழக ஆளுநர் கே.ரோசய்யா அன்றைய தினம் சட்டப் பேரவையில் உரை நிகழ்த்த உள்ளார்.

கடந்த ஆண்டில் நிறைவேற்றப் பட்ட அரசின் திட்டங்கள், அரசின் சாதனைகள், புதிய ஆண்டில் செயல்படுத்தப்படவுள்ள திட் டங்கள் குறித்து ஆண்டுதோறும் ஆளுநர் உரையில் அறிவிப்புகள் வெளியாகும். மாநில பட்ஜெட்டில் இடம்பெறவுள்ள சில திட்டங்கள் குறித்தும் அறிவிக்கப்படும். அரசின் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்பதால், ஆளுநர் உரை எதிர்பார்ப்பை ஏற்படுத்தி யுள்ளது.

முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக கடந்த டிசம்பரில் குளிர்காலக் கூட்டத்தொடர் 3 நாட்கள் நடந்தது. தற்போது, ஆளுநர் உரையுடன் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கவுள்ளது. கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடக்கும் என்று சட்டப் பேரவை அலுவல் ஆய்வுக்குழு பிப்ரவரி 16-ம் தேதி கூடி முடிவு செய்யும் என்று தெரிகிறது. கூட்டத்தொடர் 3 அல்லது 5 நாட்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்தொடர் முடிந்து சுமார் ஒரு மாதம் கழித்து மார்ச்சில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம்

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் 35 நிமிடம் நடந்தது. ஆளுநர் உரையில் அறிவிக்கப்படும் திட்டங்கள், மத்திய அரசுக்கு அனுப்பவேண்டிய கொள்கை ரீதியிலான சில முடிவுகள் ஆகியவை குறித்து அமைச்சர வைக் கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டதாக கூறப்படுகிறது.

கூட்டம் முடிந்ததும் அமைச் சர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துக் கொண்டனர். பின்னர் ரங்கம் தேர்தல் பணிகளை கவனிக்க அவசர அவசரமாக புறப்பட்டுச் சென்றனர். அமைச்சர வைக் கூட்டத்தில் மின் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கவில்லை. ரங்கம் தேர்தல் பணியில் ஈடுபட்டிருப்பதால் வரவில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x