Published : 03 Feb 2015 08:41 AM
Last Updated : 03 Feb 2015 08:41 AM

பல மாநிலங்களில் வேகமாக பரவும் பன்றிக் காய்ச்சல்: ராஜஸ்தான், தெலங்கானாவில் ஒரே நாளில் 12 பேர் பரிதாப பலி

ஆந்திரம், தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங் களில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் ராஜஸ்தானில் 10 பேரும், தெலங்கானாவில் 2 பேரும் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். ஆந்திர மாநில பெண் எம்.பி.க்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் பல மாநிலங் களில் கடந்த ஒரு மாதமாக பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஆந்திரம், தெலங்கானா, டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களில் பன்றிக் காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த மாநிலங்களில் பலர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். தமிழகத்திலும் ஒருவர் பலியானார்.

இந்நிலையில், ராஜஸ்தானில் நேற்று ஒரே நாளில் 10 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அந்த மாநிலத்தின் ஆஜ்மீர் நகரில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்தனர். அதேபோல, ஜோத்பூரில் 2 பேர், ஜெய்ப்பூர், டோங்க், நாகார் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் சிகிச்சை பயனின்றி இறந்தனர். இதையடுத்து, ராஜஸ்தானில் கடந்த ஒரு மாதத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. இதில் 26 பேர் பெண்கள், 23 பேர் ஆண்கள்.

ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

டெல்லியிலும் பன்றிக் காய்ச்ச லால் பலர் உயிரிழந்துள்ளனர். தற்போது 49 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. டெல்லியில் கடந்த ஒரு மாதத்தில் இதுவரை 400 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத்திலும் இந்த நோய் வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் அங்கு 6 பேர் இறந்தனர். அவர் களையும் சேர்த்து அந்த மாநிலத் தில் 37 பேர் பன்றிக் காய்ச்ச லுக்கு பலியாகியுள்ளனர். மகாராஷ்டிரத்தில் பலர் உயிரிழந் துள்ள நிலையில், மேலும் 70 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது.

பெண் எம்.பி.க்கு சிகிச்சை

தெலங்கானா, ஆந்திர மாநிலங்களிலும் பன்றிக் காய்ச்சல் தீவிரமடைந்து வருகிறது. ஆந்திரத்தில் 3 பேர் இந்நோயால் உயிரிழந்துள்ளனர். தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி உட்பட இருவர் நேற்று இறந்தனர். இதுவரை அந்த மாநிலத்தில் 35 பேர் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத் தைச் சேர்ந்த அராகு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கீதா வுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனை யில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேதக் மாவட்ட இணை ஆட்சியர் ராஜாராமும் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா அரசு மருத்துவமனையில் பணியாற் றும் 12 மருத்துவர்கள், 2 செவிலியர்களும் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

கோவையில் 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு

கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தவர் 3 பேர் பன்றிக் காய்ச்சல் பாதிப்புடன் அரசு பொது மருத்துவமனையில் தனி வார்டில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே 4 பேர் பன்றிக் காய்ச்சல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 5 நாட்களில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. கோவை மாநகரில் சாய்பாபா காலனி மற்றும் கணபதி பகுதிகளில் இருந்து பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் அடுத்தடுத்து நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x