போலி என்கவுன்ட்டர் வழக்கில் ஜாமீன்: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி வன்சாரா சிறையிலிருந்து விடுவிப்பு

போலி என்கவுன்ட்டர் வழக்கில் ஜாமீன்: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி வன்சாரா சிறையிலிருந்து விடுவிப்பு
Updated on
1 min read

போலி என்கவுன்ட்டர் வழக்கில் கைது செய்யப்பட்ட குஜராத் மாநில முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி டி.ஜி.வன்சாராவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து, ஏழரை ஆண்டுகளுக்குப் பிறகு சபர்மதி சிறையிலிருந்து நேற்று அவர் விடுவிக்கப்பட்டார்.

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு வன்சாரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''எனக்கும் மற்ற போலீஸ் அதிகாரிகளுக்கும் நல்ல காலம் பிறந்திருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள போலீஸார் தீவிரவாதத்தை எதிர்த்து போரிடுகின்றனர். அந்த வகையில் செயல்பட்ட குஜராத் போலீஸார் மீது அரசியல் காரணங்களுக்காக முந்தைய மத்திய அரசு எங்கள் மீது வழக்கு தொடுத்து கைது செய்தது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான் அதிக அளவில் என்கவுன்ட்டர் சம்பவங்கள் நடைபெற்றன. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, குஜராத்தில் என்கவுன்ட்டர் சம்பவங்கள் குறைவுதான். ஆனாலும் குஜராத் போலீஸார் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வன்சாராவுக்கு அகமதாபாத் நீதிமன்றம் கடந்த 3-ம் தேதி ஜாமீன் வழங்கியது. இதுபோல் சோரபுதீன் ஷேக் மற்றும் துளசிராம் பிரஜாபதி போலி என்கவுன்ட்டர் வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்டுள்ள வன்சாராவுக்கு மும்பை நீதிமன்றம் ஏற்கெனவே ஜாமீன் வழங்கி இருந்தது.

சோரபுதீன் ஷெக் போலி என்கவுன்ட்டர் வழக்கில் கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி சிஐடி குற்றப் பிரிவு போலீஸாரால் வன்சாரா கைது செய்யப்பட்டார். அப்போதிலிருந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

கடந்த 2004-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி அகமதாபாத்தின் புறநகர் பகுதியில், கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் மற்றும் 3 பேர் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது, வன்சாரா குஜராத் போலீஸின் குற்றப் பிரிவில் துணை ஆணையராக இருந்தார். இது போலி என்கவுன்ட்டர் என சிபிஐ வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in