பிஹாரில் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் நிதிஷ்

பிஹாரில் ஆட்சி அமைக்க  உரிமை கோருகிறார் நிதிஷ்
Updated on
2 min read

பிஹாரில் புதிய ஆட்சி அமைக்க நிதிஷ்குமார் உரிமை கோரியுள்ளார். இதுதொடர்பாக ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் ஆளுநரிடம் ஆதரவு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. பிஹாரில் தற்போது ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சியில் உள்ளது. அந்த மாநில முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சிக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

இதைத் தொடர்ந்து நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக ஏதுவாக ஐக்கிய ஜனதா தள சட்டப்பேரவைத் தலைவராக நேற்று முன்தினம் அவர் தேர்வு செய்யப்பட்டார். அதேநாளில் அமைச்சரவை அவசர கூட்டத்தை நடத்திய முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி, சட்டப்பேரவையை கலைக்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதியிடம் பரிந்துரை செய்துள்ளார்.

இந்நிலையில் பிஹாரில் புதிய ஆட்சி அமைக்க ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான நிதிஷ்குமார் உரிமை கோரியுள்ளார்.

130 எம்எல்ஏக்கள் ஆதரவு

இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் பாசிஸ்தா நாராயண் சிங் பாட்னாவில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: நிதிஷ்குமார் தலைமையில் பிஹாரில் புதிய ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளோம். சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 243 உறுப்பினர்களில் 130 பேர் நிதிஷ்குமாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று ஆதரவு கடிதத்தை அளித்துள்ளோம்.

இதை ஏற்று ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த விவகாரத்தில் ஆளுநர் தாமதம் செய்தால் குதிரை பேரத்தை ஊக்குவிப்பதாக அமையும். இவ் வாறு அவர் தெரிவித்தார். ராஷ்டிரிய ஜனதா தளம் (24), காங்கிரஸ் (5), இந்திய கம்யூனிஸ்ட் (1), ஒரு சுயேட்சை எம்எல்ஏ ஆகியோரும் நிதிஷ்குமாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் மாளிகைக்கு ஐக்கிய ஜனதா தள தலைவர்களுடன் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களும் உடன் சென்றனர்.

கட்சியை பிளவுபடுத்த சதி

ஐக்கிய ஜனதா தள செய்தித் தொடர்பாளர் கே.சி. தியாகி புது டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது: பாஜகவின் தூண்டுதலின்பேரில் முதல்வர் மாஞ்சி செயல்பட்டு வருகிறார். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தார்மிகரீதியாக அவருக்கு உரிமை இல்லை.

ஐக்கிய ஜனதா தளத்தை பிளவுபடுத்த பாஜக தலைவர் அமித் ஷா முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதை முறியடிப்போம். தேவைப்பட்டால் ஆளுநர் முன்னிலையில் 130 எம்எல் ஏக்களையும் அணிவகுக்க செய் வோம் என்று அவர் தெரிவித்தார்.

சபாநாயகர் அங்கீகாரம்

ஐக்கிய ஜனதா தள சட்டப்பேரவைத் தலைவராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டதை அந்த மாநில சட்டப்பேரவை சபாநாயகர் உதய் நாராயண் சவுத்ரி அங்கீகரித்துள்ளார்.

இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளர் ஹரேராம் முகியா நேற்று வெளியிட்டார். சபாநாயகரின் அங்கீகார கடிதம் ஆளுநர் மாளிகைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை, நிதிஷ்குமார் இன்று சந்தித்து ஆட்சியமைக்க முறைப்படி உரிமை கோருவார் என்று தெரிகிறது.

ஆளுநர் இன்று பாட்னா வருகை

மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதி கூடுதலாக பிஹார் ஆளுநர் பொறுப்பையும் கவனித்து வருகிறார். பிஹார் மாநிலத்தின் அரசியல் நிலவரம் குறித்து அவரிடம் தொலைபேசியில் விசாரித்தபோது, அவர் கருத்து தெரிவிக்கவில்லை. திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு பாட்னா வருகிறேன் என்று மட்டும் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in