

காங்கிரஸ் கட்சியின் டெல்லி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அஜய் மாக்கன் விலகியுள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையான நிலையில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் கடுமையான தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்த நிலையில் தோல்விக்குப் பொறுப்பேற்று டெல்லி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அஜய் மாக்கன் விலகியுள்ளார்.
இது குறித்து அஜய் மாக்கன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது "அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்கிறேன். எனவே, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன்" என்றார்.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட 69 வேட்பாளர்களும் தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில் நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தோல்வி மிகப் பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அஜய் மாக்கன் நிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.