

இந்தியாவின் அடுத்த பிரதமர் திருமணமாகாதவராகவே இருப்பார் என்று கணிக்கப்பட்டுள்ளது. பிரதமர் பதவிக்கான முக்கிய வேட்பாளர்களாகக் கருதப்படும் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் திருமணமாகாதவர்கள்.
இந்த இரு பிரதான கட்சிகள் அல்லாமல் தேர்தலுக்குப் பின் புதிய கூட்டணி ஏதும் அமைந்து ஆட்சி அமைத்தால் தமிழக முதல்வர் ஜெயலலிதா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி ஆகியோர் பிரதமராக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இவர்கள் மூவரும் திருமணமாகாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் பதவிக்கான வேட்பாளர்களில் முன்னணியில் இருப்பவரான நரேந்திர மோடிக்கு 63 வயதாகிறது. இந்து தேசியவாதியாகவும், நவீனகால துறவியாகவும் மோடியை வர்ணித்துள்ளார் அவரது சுயசரிதையை எழுதியுள்ள நீலன்சன் முகோபாத்யா.
அதே நேரத்தில் 43 வயதாகும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பட்டத்து இளவரசர் என்று அழைக்கப்படுகிறார். நேரு-காந்தி குடும்பத்தின் வாரிசு என்பது பிரதமர் பதவிக்கு அவரது கூடுதல் தகுதியாக பார்க்கப்படுகிறது.
எனினும் மோடி மற்றும் ராகுலின் திருமணமாகாதவர் என்ற தகுதி குறித்து சர்ச்சைகளும் ஏற்பட்டுள்ளன. மோடிக்கு சிறுவயதிலேயே திருமணமாகிவிட்டது என்றும், ஆனால் அப்போதே அவர் மனைவியைப் பிரிந்துவிட்டார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பெண் தோழிகள் குறித்து முன்பு பலமுறை பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் தேர்தல் பிரச்சார மேடைகளில் பேசும்போது, எனக்கு எந்த குடும்ப உறவுகளும் இல்லை. எனவே யாருக்காகவும் சொத்து சேர்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நாட்டின் சேவைக்காக என்னை அர்ப்பணித்துள்ளேன் என்றே குறிப்பிட்டு வருகிறார் மோடி.
மோடியின் மனைவி யார்? ராகுல் காந்தியின் தோழி யார்? என்பது கூகுளில் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்டவைகளில் ஒன்றாகவும் உள்ளது.
இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர் இந்தியாவின் முதல் திருமணமாகாத பிரதமர் என்ற பெருமையைப் பெற முடியாது. ஏனெனில் ஏற்கெனவே அடல் பிகாரி வாஜ்பாய் அப்பெருமையைப் பெற்றுள்ளார்.