Published : 02 Feb 2015 10:57 AM
Last Updated : 02 Feb 2015 10:57 AM

பா.ஜ.க.வுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை: சிவசேனா விளக்கம்

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள பாரதிய ஜனதா கட்சியுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று சிவசேனா விளக்கமளித்துள்ளது.

சமீபத்தில், அம்மாநிலத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து ஐந்து விவசாயிகள் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாததால் தற்கொலை செய்துகொண்டனர். இவ்வாறு தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை விதர்பா பகுதியில் அதிகமாக உள்ளது.

இதே விதர்பா பகுதியில் இருந்து வந்த தேவேந்திர பட்னாவிஸ் மாநில முதல்வராகவும், சுதிர் முங்கந்திவார் நிதியமைச்சராகவும் இருந்தும் விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க எதுவும் செய்யமுடியவில்லை என்கிற ரீதியில் சிவ சேனாவின் அதிகாரப் பூர்வ நாளேடான 'சாம்னா'வில் தலையங்கம் எழுதப்பட்டிருந்தது.

தலையங்கம் வெளியானதைத் தொடர்ந்து பா.ஜ.க.வின் வினய் சஹஸ்ரபுத்தே மற்றும் வினோத் தவ்டே ஆகியோர், 'இந்தத் தலையங்கத்தை பா.ஜ.க.வினர் தீவிரமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அதேபோல பா.ஜ.க.வுடன் உரையாடுவதற்கு சிவசேனா இதுபோன்ற தலையங்கங்கள் மூலம் தொடர்பு கொள்ளக்கூடாது' என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில், விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சித் தலைவர் மகேந்திர தோர்வே சிவசேனா கட்சியில் இணைந்தார். அப்போது பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, "தேர்தல் சமயத்தில் இரண்டு கட்சிகளும் மக்களுக்கு என்ன வாக்குறுதிகளைக் கொடுத்தனவோ அவற்றை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் இருக்கிறோம். பா.ஜ.க.வுடன் கைகோத்து சிவசேனா எப்போதும் பணியாற்றும்" என்று கூறினார்.

அப்போது, சோடியம் விளக்கு களை மாற்றிவிட்டு எல்.ஈ.டி.பல்புகளைப் பொறுத்துவதில் சிவ சேனாவுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே நீடித்து வரும் இழுபறி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த உத்தவ் தாக்கரே, "இதுகுறித்து ப்ரிஹான் மும்பை நகராட்சிதான் முடிவு செய்யும். அவர்கள் மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனைகளைக் கேட்ட பிறகே அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x