

நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் 21ம் நூற்றாண்டின் நிதிச் சேவைகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மத்திய இணை நிதியமைச்சர் ஜெயந்த் சின்ஹா மக்களவையில் கேள்வி நேரத்தின் போது கூறியதாவது:
நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் வீடி தேடி வந்து 21ம் நூற்றாண்டின் நிதிச் சேவைகளை வழங்குவதே எங்களின் இலக்கு. இதற்காக, சிறிய வங்கிகளுக்கு உரிமம் வழங்குதல், 'பேங்க் மித்ரா' (வங்கி நண்பன்) திட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
பிரதமரின் ஜன் தன் யோஜனா மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நூறு சதவீத வீடுகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
தவிர, நாட்டின் பின்தங்கிய பகுதிகளில் உள்ளவர்களையும் நிதிச் சேவைகளுக்குள் கொண்டு வர, பொதுத்துறை மற்றும் கிராம வங்கிகள் நடவடிக்கை மேற் கொண்டு வருகின்றன.
தங்களுக்கான கிளைகளை ஏற்படுத்த அவர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த வங்கிகளில் வேலைவாய்ப்புகள் என்பது வணிக அளவு, வங்கியின் வளர்ச்சி, ஊழியர் எண்ணிக்கை, பணி ஓய்வு எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில்தான் உருவாக்கப் படும். எனினும், தங்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம், வங்கிகள் வேலைவாய்ப்புகளை உருவாக்கியே வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.