ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சம்மனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தயாநிதி, கலாநிதி மாறன் மனு

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சம்மனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தயாநிதி, கலாநிதி மாறன் மனு
Updated on
1 min read

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணைக்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம், ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தங்களுக்கு சம்மன் அளித்துள்ளதை எதிர்த்து கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக மட்டுமே சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு ஸ்பெக்ட்ரம் முறைகேட்டுடன் தொடர்புடையதல்ல. எனவே, இவ்வழக்கில் தங்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளதால், சிறப்பு நீதிமன்றத்தின் அதிகார வரம்பு குறித்து கேள்வியெழுப்பும் வகையில் இம்மனு கலாநிதி, தயாநிதி ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சரான தயாநிதி மாறன் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில், தயாநிதி, கலாநிதி மற்றும் 6 பேரும் வரும் மார்ச் 2-ம் தேதி ஆஜராகும்படி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி சம்மன் அனுப்ப உத்தரவிட்டிருந்தார்.

ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளரான சிவசங்கரனை கட்டாயப்படுத்தி அவரின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அனந்த கிருஷ்ணனுக்கு விற்கச் செய்ததாகவும், அதற்குப் பலனாக, மேக்சிஸ் நிறுவனத்திடமிருந்து வேறொரு நிறுவனம் வழியாக சன் டைரக்ட் டிவி நிறுவனத்துக்கு முதலீடு என்ற வகையில் ஆதாயம் அடைந்ததாகவும் தயாநிதி மாறன் மீது சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in