

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.ரோஹிணி ஆகிய இருவரும் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க பின்பற்றப்பட்டு வரும் ‘கொலீஜியம்’ முறையை மாற்றி, மத்திய அரசு அரசியலமைப்பு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் தேசிய நீதிபதிகள் நியமனக் குழு அமைக்கப்பட்டு, அக்குழு உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் ஒப்புதல்
இச்சட்டத் திருத்தத்துக்கு 16 மாநில சட்டசபைகள் ஒப்புதல் அளித்து, கடந்த ஜனவரி 1-ம் தேதி குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் கிடைத்துவிட்டது. 6 பேர் கொண்ட இக்குழுவுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைவராக இருப்பார். இரண்டு மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மத்திய சட்டத் துறை அமைச்சர், இரண்டு பிரபல சட்ட நிபுணர்கள் இக்குழுவில் இடம்பெறுவர்.
இந்த புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்ற ஆவண வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான மூன்று மூத்த நீதிபதிகள் அடங்கிய ‘கொலீஜியம்’ சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.ரோஹிணி ஆகிய இருவரது பெயர்களையும் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த பரிந்துரை குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்த பிறகே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.ரோஹிணி பெயர்களை உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்திருப்பதாக கூறப்படுகிறது.