

ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான மதிப்பில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனை நடவடிக்கையின்போது நிரந்தரக் கணக்கு எண் (பான் நம்பர்) கட்டாயமாக தெரிவிக்க வேண்டும்.
இது தொடர்பாக மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி வெளியிட்ட அறிவிப்பு:
ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான மதிப்பில் மேற்கொள்ளப்படும் விற்பனை அல்லது வாங்குதல் நடவடிக்கையின்போது நிரந்தரக் கணக்கு எண் (பான் நம்பர்) கட்டாயமாக தெரிவிக்க வேண்டும்.
அதேநேரத்தில், பான் எண்ணை தெரிவிப்பதை தவிர்ப்பதற்காக, பணப் பரிவர்த்தனை பல நிலைகளாக பிரிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வருமான வரித் துறை உரிய நடவடிக்கை எடுக்கும்.
அசையா சொத்து பரிமாற்றத்தின்போது, முன்பணமாக ரூ.20 ஆயிரம் அல்லது அதற்கு மேல் ரொக்கமாக பெற்றுக்கொள்ளவும் வழங்கவும் தடை விதிக்கப்படும். இதற்காக வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்.
பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டம்
உள்நாட்டில் கருப்பு பணம் உருவாவதைத் தடுக்கும் வகையில் பினாமி பரிவர்த்தனை (தடுப்பு) மசோதா நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகம் செயப்படும்.
பினாமி நபர்களின் பெயரில் பெருமளவில் கருப்பு பணம் பதுக்கப்படுகிறது. குறிப்பாக, கருப்பு பணம் பினாமிகளின் பெயரில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யப்படுகிறது.
இதுபோன்ற பினாமி சொத்துகளை பறிமுதல் செய்யவும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் பினாமி பரிவர்த்தனை தடுப்பு மசோதா கொண்டுவரப்படும்" என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.