Published : 27 Feb 2015 09:15 AM
Last Updated : 27 Feb 2015 09:15 AM

ரயில்வே பட்ஜெட்: எஸ்.எம்.எஸ். தகவல் முதல் ஃபேஸ்புக் கருத்து வரை

ரயில் நேரங்களை சொல்ல எஸ்.எம்.எஸ். தகவல்

ரயில்வே பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு பயணிகளின் வசதிக்காக 'எஸ்.எம்.எஸ். அலர்ட்' சேவை தொடங்கப்படும் என்று குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

ரயில் வரும் நேரம் மற்றும் புறப்படும் நேரம் ஆகியவை பற்றி பயணிகள் முன்னதாகவே அறிந்துகொள்ள 'எஸ்.எம்.எஸ். தகவல்' சேவை தொடங்கப்படவுள்ளது. மேலும், ரயில் நிலையத்தில் 15 அல்லது 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே ரயில் வரும் நேரம் குறித்து பயணிகளுக்குத் தெரிவிக்கவும் இந்தச் சேவை பயன்படுத்தப்படும்.

தவிர, இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் உள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமான ரயில் நிலையங்களில் 'ரயில்வே டிஸ்பிளே நெட்வொர்க்' எனும் மையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் ரயில் வரும் நேரம், புறப்படும் நேரம், அவசரகாலத் தொடர்பு எண்கள், முன்பதிவு விவரங்கள் போன்ற சேவைகள் வழங்கப்படவுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு திட்டமிட்ட செலவு: 52 சதவீதம் உயர்வு

ரயில்வே துறையின் திட்டமிட்ட செலவு 2015-16 நிதியாண்டில் 52 சதவீதம் உயர்த்தப்படுவதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

நடப்பு 2014-15 நிதியாண்டுக்கான திட்டமிட்ட செலவு ரூ.65,798 கோடியாக உள்ளது. இது அடுத்த நிதியாண்டில் ரூ.1,00,011 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது நடப்பு நிதியாண்டைவிட 52 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த திட்டமிட்ட செலவில் 41.6 சதவீதத்தை மத்திய அரசும் 17.8 சதவீதத்தை ரயில்வே துறையும் வழங்கும்.

பட்ஜெட்டுக்கு மிஞ்சிய தொகையை திரட்டுவது மிகவும் சவாலானதாக இருக்கும். எனவே, ரயில்வே வாரியத்தில் நிதி பிரிவு ஒன்றை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு நிதி ஆதாரத்தைக் கண்டறிவது தொடர்பாக இத்துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்துக்களைக் கேட்டறியும்.

பேஸ்புக், ட்விட்டர் பக்க கருத்துகள்: ரயில்வே பட்ஜெட்டில் சேர்ப்பு

சமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றில் ரயில்வே அமைச்சகத்தின் பக்கங்களில், பொதுமக்கள் கூறியிருந்த கருத்துகளும் ரயில்வே பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டிருப்பதாக மத்திய ரயில்வேதுறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

ரயில்வே துறைக்கான சமூக வலைதள பக்கங்களில் பொதுமக்களிடம் இருந்து சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் கருத்துகளைப் பெற்றுள்ளோம். அவற்றில் சில‌ கருத்துகள் ரயில்வே பட்ஜெட்டில் இடம்பிடித்திருக்கின்றன. ரயில்வே துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட வேண்டியுள்ளன. எனினும், தரமான சேவை என்பதுதான் எங்களின் முதல் குறிக்கோள். இவ்வாறு அவர் கூறினார்.

ரயில்வே அமைச்சகம் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகிய வலைதளங்களில் தனக்கான பக்கங்களைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

சாதாரண வகுப்பு பெட்டிகளில் செல்போன் சார்ஜ் செய்ய வசதி

மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த 2015-16 நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் சாதாரண வகுப்பு பெட்டிகளிலும் செல்போன் சார்ஜ் செய்யும் வசதி ஏற்படுத்தித் தரப்படும். படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் ஏற்கெனவே உள்ள செல்போன் சார்ஜ் செய்யும் வசதி மேலும் அதிகரிக்கப்படும்.

ரயில்வே துறையின் டெல்லி மண்டலம், உரிம கட்டண அடிப்படையில் சதாப்தி ரயில்கள் சிலவற்றில் பொழுதுபோக்கு வசதிகளை அறிமுகம் செய்யும். இதற்கான வரவேற்பைப் பொறுத்து அனைத்து சதாப்தி ரயில்களுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடிவுகளை விரைவில் எடுக்க அதிகாரம் பரவலாக்கம்

ரயில்வே துறையில் முடிவுகளை விரைவில் எடுக்கும் வகையிலும், நடைமுறை சிக்கல்களை குறைக்கும் வகையிலும் அதிகார பரவலாக்கம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் பொது மேலாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்படுகிறது.

அதிகார பரவலாக்கம் குறித்து பட்ஜெட்டில் அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியது: ரயில் நிலையங்களில் கடைகள் அமைப்பது சிறிய பணிகளுக்கான டெண்டர்களை விடுவது போன்றவற்றுக்கான அதிகாரம் ஏற்கெனவே ரயில்வே பொது மேலாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல ரயில்வேயில் சரக்குகளை கையாளுவது தொடர்பான விதிமுறைகளும், நடைமுறைகளும் சற்று தளர்த்தப்படுகின்றன. உதாரணமாக ரயில்வே அமைச்சகத்திடம் இருந்து பெற வேண்டிய ரயில் சரக்கு போக்குவரத்து ஒப்புதல் முறை இனி இருக்காது. இது ரயிலை சரக்கு போக்குவரத்துக்காக பயன்படுத்துபவர்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். தனியார் துறையின் பங்களிப்பை உற்சாகப்படுத்தும் வகையில் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும்.

ரயில்வே வாரிய நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை இருக்கும். நிர்வாக முறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

செயல்பாட்டு விகிதத்தை 88.5 சதவீதமாக குறைக்க திட்டம்

வரும் நிதியாண்டில் செயல்பாட்டு விகிதத்தை (operating ratio) 88.5 சதவீதமாக குறைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தனது பட்ஜெட் உரையில் கூறியதாவது:

செயல்பாட்டு விகிதத்தின் (வருவாயில் ஏற்படும் செலவு) அடிப்படையிலேயே ஒரு நிறுவனத்தின் செயல்திறன் மதிப் பிடப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் (2014-15) ரயில்வே செயல்பாட்டு விகிதம் 91.8 சதவீதமாக உள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டில் அதிகபட்சமாக 93.6 சதவீதமாக இருந்தது. இந்நிலையில் வரும் நிதியாண்டில் செயல்பாட்டு விகிதத்தை 88.5 சதவீமாக குறைக்க திட்டமிட்டுள்ளோம்.

கடந்த 9 ஆண்டுகளில் இதுவே சிறந்த விகிதமாக இருக்கும். ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டு விகிதம் குறையும்போது லாபம் அதிகரிக்கிறது. இதன் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாயை பயனுள்ள வகையில் முதலீடு செய்யமுடியும். ரயில்வே செயல்பாடு மற்றும் வணிக செயல் திறனில் அதிகபட்ச தரத்தை ரயில்வே அமைச்சகம் உறுதிப் படுத்த வேண்டியுள்ளது.

முடிவு எடுப்பதை விரைவு படுத்துவது, பொறுப்பேற்கச் செய்வதை இறுக்கமாக்குவது, நிர்வாக தகவல் தொடர்பு முறையை மேம்படுத்துவது ஆகிய மாற்றங்களின் மூலமே ரயில்வே துறையின் செயல்பாட்டு விகிதத்தை குறைக்க முடியும்.

மாற்றத்தை நோக்கிய எங்கள் பயணம் வெற்றிபெற எங்கள் ஊழி யர்களுக்கு உரிய பயிற்சி அளித்து அவர்கள் திறனை மேம்படுத்துவது அவசியமாகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

பணியாளர்களின் திறனை மேம்படுத்த பயிற்சி மையங்கள்

ரயில்வே பணியாளர்களின் திறனை மேம்படுத்த பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள் ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்து ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியது: ரயில்வேயில் திறமையான பணியாளர்கள் அதிகம் உள்ளனர். அவர்களின் திறமையை மேலும் அதிகரித்து அதனை தேசநலனுக்காக பயன் படுத்திக் கொள்ள திறன் மேம்பாட்டு பயிற்சி மையங் கள் அமைக்கப்படும்.இப் போதுள்ள உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டே இந்த மையங்கள் செயல்படும்.

நமது அரசு சுயதொழி லுக்கும், திறன் மேம்பாட்டுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக் கிறது. அதில் ரயில்வேயும் தனது சிறப்பான பங்க ளிப்பை செலுத்தும் வகை யில், பெண்கள் மற்றும் இளை ஞர்களால் நடத்தப்படும் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு களை வாங்க முக்கியத்துவம் அளிக்கப்படும். ஏற்கெனவே கொங்கன் ரயில்வே கடந்த 3 மாதங்களாக 3 மாநிலங்களில் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட முடிவு

ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசுகள், முக்கிய பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற் றோடு இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான தனது திட்டத்தை பட்ஜெட்டின்போது சுரேஷ் பிரபு அறிவித்தார். அப்போது அவர் கூறியது: ரயில்வே திட்டங் களை மேம்படுத்துவது, திட்டங் களுக்கான நிதி திரட்டுவது, நிலம் கையகப்படுத்துதல், திட்ட அமலாக்கம், திட்டங்களை கண் காணிப்பது போன்றவற்றில் மாநில அரசுகள், முக்கிய பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து ரயில்வே செயல் படும். ரயில் சேவைகளை நாட்டின் பின்தங்கிய பகுதிகளுக்கும், தொலைதூர இடங்களுக்கும் அளிக்க வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம்.

பெரும் பொதுத் துறை நிறு வனங்கள் பல தங்கள் சரக்கு போக்கு வரத்துக்கு ரயிலை அதிகம் பயன் படுத்துகின்றன. அவர்களுக்கு தேவையான இடங்களில் வழித் தடங் கள் அமைக்கப்பட்டால், அதிக வருமானம் கிடைக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x