

ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றிக் களிப்பில் ஆணவம் கொள்ள வேண் டாம் என தன் தொண்டர்களுக்கு அதன் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லி சட்டப்பேரவை தேர்த லின் வாக்கு எண்ணிக்கையின்போது தம் கட்சி அலுவலகத்தில் கூடிய தொண்டர்கள் முன்னி லையில் பேசும்போது அவர் இதனைத் தெரி வித்தார்.
கடந்த பிப்ரவரி 7-ம் தேதி டெல்லியில் நடந்த சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில், ஆரம்பித்திலிருந்தே முன்னிலை வகித்த ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லி முழுவதும் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் இறங்கினர்.
ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் அர்விந்த் கேஜ்ரிவால் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: டெல்லிவாசிகள் இந்த தேர்தலில் மிகவும் ஆச்சரியப் படுத்திவிட்டனர். இது நேர்மை மற்றும் உண்மையின் வெற்றி ஆகும். ஆனால், இது சற்று அச்சமூட்டும் வகையிலும் உள்ளது. நேர்மை மற்றும் உண்மைக்கான பாதையை நோக்கி செல்லும்போது அதற்கு உலகின் அனைத்து சக்திகளும் உதவி புரிகின்றன. இதன்மூலம் நம் கட்சி தொண்டர்கள் அனைவரிடமும் நான் கேட்டுக் கொள்வது என்னவெனில், ஆணவம் கொள்ளாமல் இருங்கள். இந்த ஆணவம் கொண்டதால் தான் பாஜக மற்றும் காங்கிரஸுக்கு தோல்வி கிடைத் தது. அவர்களைப் போல் நாமும் ஆணவம் கொண்டால் அடுத்த ஐந்து வருடங்களில் மக்கள் நமக்கு பாடம் புகட்டி விடுவார்கள்.
டெல்லியின் வளர்ச்சிக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். என்னால் தனியாக ஒன்றும் செய்ய முடியாது. ஒன்றிணைந்து செயல்பட்டால் இந்நகரில் ஏழை மற்றும் பணக்காரர்கள் வாழும் டெல்லியின் மீது பெருமிதம் கொள்ளச் செய்யலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கட்சி அலுவலகத்தின் முதல் மாடி மாடத்தில் இருந்து தொண்டர்களிடம் பேசிய கேஜ்ரிவால் தனது மனைவி மற்றும் தந்தையை அறிமுகப்படுத்தினார். இவர்கள் ஒத்துழைப்பின்றி தம்மால் இந்த வெற்றியை அடைந்து இருக்க முடியாது எனவும் தன் குடும்பத்தாரை பாராட்டினார். இங்கும் வழக்கம்போல், தனது உரையை கேஜ்ரிவால், ‘ஜெய் ஹிந்த்! பாரத் மாதா கீ ஜெய்!’ எனக் கோஷத்துடன் முடித்தார்.