மோடி மீதான விமர்சனம்: சல்மான் குர்ஷித்துக்கு பாஜக கண்டனம்

மோடி மீதான விமர்சனம்: சல்மான் குர்ஷித்துக்கு பாஜக கண்டனம்
Updated on
1 min read

குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை தரக்குறைவாக விமர்சனம் செய்த மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக-வினர் தெரிவித்துள்ளனர்.

மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் செவ்வாய்க் கிழமை நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்திருந்தார்.

"குஜராத்தில் 2002.ல் கலவரம் நடந்து கொண்டிருந்தது. யார், யாரோ அப்பாவி மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திச் சென்றனர். ஆனால் மோடி அவற்றை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தார். மோடியால் கலவரத்தை தடுக்க முடியவில்லை. கலவரத்தை தடுக்காத நரேந்திர மோடி செயல் திறனற்றவர் (impotent)" என சல்மான் குர்ஷித் விமர்சித்திருந்தார்.

அவரது இந்த விமர்சனம் பாஜக-வினர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

'விரக்தியில் காங்கிரஸ்'

சல்மான் குர்ஷித்தின் இந்த விமர்சனம் காங்கிரஸ் கட்சியின் விரக்தியை காட்டுவதாக பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

மேலும், "இத்தகைய விமர்சனத்தை நாட்டின் வெளியுறவு அமைச்சராக இருப்பவர் முன்வைத்துள்ளது வருந்தத்தக்கது மட்டுமல்ல, வெட்கப்பட வேண்டியதும் கூட. காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். இத்தகைய தரக்குறைவான வார்த்தையை சல்மான் குர்ஷித் பயன்படுத்தியிருப்பதை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அனுமதிப்பாரா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்" என ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

'தோல்வி பயம்'

இது குறித்து பாஜகவின் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில்: "தேர்தல் வரும், போகும். நீங்கள் விதைத்தையே தேர்தலில் அறுவடை செய்வீர்கள். நீங்கள் நடத்திய ஊழல்களுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள். விரக்தியில், நீங்கள் இப்படி பேசுவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இருப்பினும், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பொறுமை காக்க வேண்டும் என அறிவுறுத்துகிறேன்" என கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in