Published : 27 Feb 2015 10:32 AM
Last Updated : 27 Feb 2015 10:32 AM

நாடாளுமன்ற துளிகள்: கண்காணிப்பில் வேலை உறுதித் திட்டம்

தடையில்லா மின்சாரம்

மின்சாரத்துறை இணையமைச்சர் பியூஸ் கோயல்: மின்தட்டுப்பாட்டை நீக்கவும், 24 மணி நேர தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காகவும் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்திட்டம் வகுத்து வருகிறோம். மின்தட்டுப்பாட்டை நீக்க உற்பத்தித் திறனை அதிகரித்தல், நிலக்கரி உற்பத்தியை அதிகரித்தல், புதிய மின்வழித் தடங்களை கட்டமைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2016-17-ம் நிதியாண்டுக்குள் 12-வது 5-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் கூடுதலாக 1,18,537 மெகாவாட் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே காலகட்டத்துக்குள் 1,07,440 சர்க்கியூட் கி.மீ. தூரத்துக்கு மின்தடங்கள் அமைக்கப்படும்.

கண்காணிப்பில் வேலை உறுதித் திட்டம்

ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சுதர்சன் பகத்: மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துவதற்காக, டிஜிட்டல் முறையுடன் இணைக்கப்படும். முதல்கட்டமாக சோதனை முறையில் 35,000 கிராம ஊராட்சிகளுக்கு மொபைல் அல்லது டேப்லெட் கொடுக்கப்படும். இத்திட்டத்துக்காக ரூ. 35 கோடி மதிப்பில் தலா ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள மொபைல் அல்லது டேப்லட் வாங்கப்படும். மொபைல் மூலம் ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள் கண்காணிக்கப்படும். இத்திட்டம் வெற்றிபெற்றால் 2.65 லட்சம் ஊராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை

பிரமோத் திவாரி, காங்கிரஸ் எம்.பி.: பெட்ரோலியம், பாதுகாப்புத்துறைகளில் ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன. காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் அனைத்து அமைச்சக அலுவலகங்களிலும் தகவல் திருட்டு நடைபெற்றதாக பாஜக கூறுகிறது. நாம், அரசியலுக்கு அப்பாற்பட்டு இதை அணுக வேண்டும். நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அக்குழு ஒரு மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கட்டும். கட்சி அடிப்படையில் நாடாளுமன்ற அவையை பிரித்துவிடக்கூடாது. இது தேச பாதுகாப்பு தொடர்பானது. நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடுவோம். உண்மை மக்களுக்குத் தெரியட்டும்.

சட்டத் திருத்தம் அவசியம்

சட்டத்துறை அமைச்சர் சதானந்த கவுடா: உரிய நிவாரணம், நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத் தன்மை, மறு குடியமர்வு மற்றும் புனர்வாழ்வுத் சட்டம் 2013-ஐ அமல்படுத்துவதில் சில சிக்கல்கள் இருப்பதாக பல்வேறு அரசுத் துறைகளும் கருத்து தெரிவித்துள்ளன. கடந்த 2014 ஜூன் 27-ம் தேதி அப்போதைய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடைபெற்ற அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களின் வருவாய்த்துறை அமைச்சர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி இச் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது அவசியமாக உள்ளது. நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தினால் விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும் எனக் கூறி பல்வேறு பரிந்துரைகள் வந்துள்ளன. அவற்றை அரசு பரிசீலித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x