நாடாளுமன்ற துளிகள்: ஆதாருடன் இணையும் வாக்காளர் அட்டை

நாடாளுமன்ற துளிகள்: ஆதாருடன் இணையும் வாக்காளர் அட்டை
Updated on
2 min read

ஆதாருடன் இணையும் வாக்காளர் அட்டை

சட்டத்துறை அமைச்சர் சாதனந்த கவுடா:

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முயற்சியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இருப்பினும் அனைத்து மக்களுக்கும் ஆதார் எண் வழங்கி முடிக்கப்படாததால் இந்த நடைமுறை அமலுக்கு வர சிறிது காலம் ஆகும்.

கொலீஜியம் முறை தொடரும்

சட்டத்துறை அமைச்சர் சதானந்த கவுடா:

தேசிய நீதித்துறை நியமன ஆணையம் (என்ஜேஏசி) அமைக்கப்படும் வரை, நீதிபதிகள் நியமனம் தற்போதைய கொலீஜியம் முறையிலேயே நடைபெறும். இதுதொடர் பான இரு மசோதாக்களுக்கு சட்ட அங்கீகாரம் அமைக்கப்பட்டு, குடியரசுத்தலைவரின் கையொப்பம் பெறப்பட்டுள்ளது. தேசிய நீதித்துறை நியமன ஆணையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது. இந்த ஆணையம் அமைக்கப்படும் வரை உச்ச நீதிமன்றம் மற்றும் 24 உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனம் கொலீஜியம் முறையிலேயே நடைபெறும்.

தேசிய குடற்புழு நீக்க தினம்

சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா:

உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி இந்தியாவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 68 சதவீதம் பேர் அதாவது 24.1 கோடி குழந்தைகள் குடற்புழு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, குழந்தைகளை குடற்புழு நோய்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், அசாம், பிஹார், சட்டீஸ்கர், தாத்ரா, நாகர் ஹவேலி, ஹரியாணா உள்ளிட்ட 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தேசிய குடற்புழு நீக்க தினம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேசிய வழிகாட்டுதலின்படி, அங்கவன்வாடி பணியாளர்கள் 1-5 வயதுக்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மருந்து வழங்கியுள்ளனர். 6-19 வயதுள்ள மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் குடற்புழு நீக்க மருந்து வழங்கியுள்ளனர். சுகாதார பணியாளர்களுக்கு இதுதொடர்பான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

ரயில்வே தனியார்மயமில்லை

ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு:

ரயில்வே துறையில் தனியார் முதலீடுகள் அனுமதிக்கப்பட்டாலும், சில புரிவுகளில் தனியார் பங்களிப்பு இருந்தாலும் ரயில்வே தொழிலாளர்களின் நலன் கருதி ரயில்வே தனியார் மயமாக்கப்படமாட்டாது. ஆட்குறைப்பு நடவடிக்கையும் இருக்காது. ஹபிப்கஞ்ச், சண்டீகர், பிஜ்வாசன், சிவாஜி நகர், ஆனந்த் விஹார் ரயில்நிலையங்கள் மறுமேம்பாட்டுக்காக இந்திய ரயில்நிலை மேம்பாட்டுக்கழகம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஸ்பீக் ஏசியா முறைகேடு

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி:

ரூ.700 கோடி முறைகேடு செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்பீக் ஏசியா நிறுவனத்தின் மீதான வழக்கில், அரசு தரப்பு மனு விரைவில் தாக்கல் செய்யப்படும். ஆன்லைன் நடவடிக்கைகளில் ஈடுபடும் சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட ஸ்பீக் ஏசியா நிறுவனம், நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்துகொள்ளவில்லை. இது நிறுவனங்கள் விவகார அமைச்சகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இதுதொடர்பாக தொடர் முறைகேடு விசாரணை அலுவலகத்தின் (எஸ்எஃப்ஐஓ) தனது விசாரணையை நிறைவு செய்து விட்டது. அதன் விசாரணை அறிக்கை பெறப்பட்டுள்ளது. இந்தியாவில் பதிவு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய சட்டங்களை மீறினால் அவற்றின்மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசியல் சாசன முகவுரை

அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்:

அரசியல் சாசன முகவுரையில் மதச்சார்பின்மை, சோஷலிஸம் ஆகிய வார்த்தைகளை நீக்குவது தொடர்பான விவாதம் நடத்தப்பட வேண்டும் என நான் ஒருபோதும் கூறவில்லை. செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ‘ நேரு, மவுலானா ஆசாத், சர்தார் வல்லபாய் படேல் போன்ற தலைவர்கள் அரசியல் சாசன முகவுரையில் மதச்சார்பின்மை வார்த்தையை ஏன் சேர்க்கவில்லை. எனவே ஜவாஹர்லால் நேரு மதச்சார்பின்மை கொண்டவரா இல்லையா என்பது குறித்து காங்கிரஸ் விவாதம் நடத்த வேண்டும்’ என்றுதான் கூறினேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in