Published : 15 Feb 2015 11:36 AM
Last Updated : 15 Feb 2015 11:36 AM

அனைத்து துறைகளையும் கண்காணிப்பார்: கேஜ்ரிவாலுக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை

டெல்லியின் புதிய முதல்வராக நேற்று பதவியேற்றுக் கொண்ட அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு எந்த இலாகாவும் ஒதுக்கப்படவில்லை. எனினும் அனைத்து துறை களையும் கண்காணிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களின் இலாகா விவரம் குறித்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செய்தியாளர் களிடம் கூறியதாவது:

கேஜ்ரிவால் அனைத்து அமைச்சர்களின் துறைகளையும் நவீன தொழில்நுட்ப உதவியுடன் மேற்பார்வை செய்வார். இதன் மூலம் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவார். எல்எல்ஏக் களையும் அவர் வழிநடத்துவார். எனக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

நிதி, கல்வி, வருவாய், நகர்ப்புற வளர்ச்சி ஆகிய துறைகள் எனக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர, யாருக்கும் ஒதுக்கப்படாத துறை களையும் கூடுதலாக கவனிப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த ஆம் ஆத்மி ஆட்சியில் இடம் பெற்றிருந்த அமைச்சர்களில் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகிய இருவருக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜெயின் கடந்த முறை நிர்வகித்த சுகாதாரம் மற்றும் தொழில் துறை ஆகியவற்றுடன் பொதுப்பணி, நீர்ப்பாசனம், வெள்ள நிவாரணம் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

புதிய அமைச்சராக பொறுப் பேற்றுள்ள கோபால் ராய்க்கு பொது நிர்வாகம், வேலைவாய்ப்பு, போக்குவரத்து மற்றும் தொழிலாளர் நலன் ஆகிய துறைகள் ஒதுக்கப் பட்டுள்ளன. உபியின் லக்னோ பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரான இவர், கேஜ்ரிவால் ஊழல் எதிர்ப்பு இயக்கம் தொடங்கியதிலிருந்தே அவருடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். கடந்த தேர்தலில் தோல்வியடைந்ததால் இவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.

வழக்கறிஞரான சந்தீப் குமாருக்கு (34) மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் தாழ்த்தப்பட்டோர் நலத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏழைகளுக்காக வழக்குகளை இலவசமாக வாதாடி புகழ் பெற்ற சந்தீப், 2012-ல் கேஜ்ரிவாலுடன் இணைந்தார்.

புதியவர்களில் மற்றொரு வழக்கறிஞரான ஜித்தேந்தர் சிங் தோமருக்கு சட்டம் மற்றும் நீதித் துறை, உள்துறை சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் தேர்தெடுக்கப்பட்ட ஐந்து முஸ்லிம் எம்எல்ஏக்களில் ஒருவரான அசீம் அகமது கானுக்கு உணவு மற்றும் ரேஷன் பொருள் விநியோகம், சுற்றுச்சூழல் மற்றும் வனம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பதவி ஏற்றுக்கொண்ட உடன் டெல்லி தலைமை செயலகத்துக்கு வந்த கேஜ்ரிவால் மற்றும் அமைச் சர்கள் அனைவரும் தங்களது அலுவலக பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு நேற்று மதியம் முதலே பணியாற்றத் தொடங்கினர்.

கடந்தமுறை அமைச்சர்களாக இருந்த ராக்கி பிர்லா, சவுரப் பரத்வாஜ், கிரிஷ் சோனி மற்றும் சோம்நாத் பாரதி ஆகியோருக்கு இந்த முறை வாய்ப்பளிக்கப்படவில்லை. ஆம் ஆத்மியின் சார்பில் ஆறு பெண்கள் வெற்றி பெற்றுள்ள போதிலும் ஒருவருக்குக்கூட அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x