

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மலைப் பகுதியில் சென்று கொண்டிருந்த பஸ் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 9 பேர் பலியாயினர். 29 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து தர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் ஹிங்கன்கர் நேற்று கூறியதாவது:
நேற்று முன்தினம் இரவு இந்தூரிலிருந்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கலியா கோட்டுக்கு பயணிகள் பஸ் ஒன்று புறப்பட்டுள்ளது. இரவு 10 மணி அளவில் ஜபுவா அருகே மசாலியா மலைப் பகுதியில் சென்று கொண்டிருந்த அந்த பஸ், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த தர் மற்றும் ஜபுவா மாட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளை முடுக்கி விட்டனர். 50 போலீஸார், 30 தேடுதல் விளக்குகள், ஒரு கிரேன் ஆகியவை மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இதில் 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும் காயமடைந்த 29 பேர் இந்தூர் மற்றும் ஜபுவா மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இழப்பீடு அறிவிப்பு
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரண உதவி வழங்கப்படும் என மத்தியப் பிரதேச மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.