

பெண் தூதர் தேவயானி கோப்ரகடே விவகாரம் இன்னும் முடியவில்லை என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்படும் இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதராகப் பணியாற்றிய தேவயானி கடந்த ஆண்டு டிசம்பரில் விசா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது தூதர் என்றும் பாராமல் பொது இடத்தில் அவரைக் கைது செய்தது, ஆடைகளைக் களைந்து சோதனை நடத்தியது ஆகியவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து தேவயானியை அந்த நாட்டு அரசு வெளியேற்றியது. அதற்குப் பதிலடியாக டெல்லியில் பணியாற்றிய அமெரிக்கத் தூதரை இந்திய அரசு வெளியேற் றியது. இதனிடையே தேவயானி மீதான விசா மோசடி வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தர விட்டது. இதை எதிர்த்து அமெரிக்க அரசு சார்பில் நீதிமன்றத்தில் மீண் டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நீறுபூத்த நெருப்பாக இருக்கும் இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் சுஜாதா சிங் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தேவயானி விவகாரம் முடிந்து விட்டதாக இந்தியா கருதவில்லை. அவர் மீது நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்திருப்பது எதிர் பாராதது. இதுதொடர்பாக இந்தியா சார்பில் கடும் ஆட்சேபத்தை தெரியப்படுத்தியுள்ளோம்.
இந்திய வெளியுறவுத் துறையிடம் பேச்சுவார்த்தை நடத்திவரும் அமெரிக்க பிரதிநிதிகளிடம் எங்களது எதிர்பார்ப்புகள், கருத்துகளை ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
-பி.டி.ஐ.