

ஊழல் புகார்களில் சிக்கும் அதிகாரிகளை சி.பி.ஐ. விசாரிப்பதற்கு, ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பாலிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்கிற ரீதியில் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த மத்திய அரசு முயன்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லோக்பால் மற்றும் லோகாயுக்தா சட்ட திருத்த மசோதா, 2014, நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதற்கிடையே, ஊழல் புகார்களை விசாரிக்க நாடு முழுவது பல்வேறு மாநிலங்களில் லோகாயுக்தா ஏற்படுத்தப்பட்டது. ஆனால் மத்திய அளவில் லோக்பால் அமைப்பு இன்னும் ஏற்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், ஊழல் புகார்களில் சிக்கும் அதிகாரிகளை சி.பி.ஐ. போன்ற விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு, அவை லோக்பால் அமைப்பிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்கிற ரீதியில் ஏற்கெனவே அமலில் உள்ள ஊழல் தடுப்புச் சட்டங்களில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு யோசித்து வருகிறது.
இதுதொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் உச்ச நீதிமன்றம், "இவ்வாறு விசாரணை அமைப்புகள் முன் அனுமதி பெற வேண்டும் என்று கட்டாயமாக்குவது ஊழல் அதிகாரிகளைப் பாதுகாக்கவே பயன்படும்" என்று கருத்து கூறியிருந்தது.
ஆனால் மத்திய அரசோ, இதன் மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்று கூறியுள்ளது. இதுதொடர்பாக பணியாளர், குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிடம் பேசியபோது, "எந்த நிலையிலும் அரசு அலுவலர்களிடையே மத்திய அரசு வேறுபாடு காட்டுவதில்லை. மாறாக, விசாரணையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவே நாங்கள் முயற்சிக்கிறோம்" என்றார்.