குழந்தைகள் உட்பட 14 பேர் பலியான கலவர சம்பவம்: கோத்ரா வழக்கில் 70 பேரும் விடுதலை - 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு

குழந்தைகள் உட்பட 14 பேர் பலியான கலவர சம்பவம்: கோத்ரா வழக்கில் 70 பேரும் விடுதலை - 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

கோத்ரா கலவரம் தொடர்பான ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 70 பேரையும் குஜராத் மாநில நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இந்த வழக்கில் சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2002 பிப்ரவரி 27-ம் தேதி குஜராத் மாநிலம், கோத்ரா ரயில் நிலையத்துக்கு வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 59 கரசேவகர்கள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து குஜராத் முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக பெரும் கலவரம் வெடித்தது. அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக புகார் எழுந்தது. மாநிலம் முழுவதும் கலவரம் பரவியதில் சுமார் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கோத்ரா கலவரத்தின்போது 2002 மார்ச் 2-ம் தேதி பனஸ்கந்தா மாவட்டம், சேஷன் கிராமத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் கொண்ட கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தியது.

இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர். கலவரத்தை கட்டுப்படுத்த போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 இந்துக்கள் உயிரிழந்தனர்.

இதுதொடர்பான வழக்கு பனஸ்கந்தா மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மொத்தம் 70 பேர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது. 190 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

போதிய ஆதாரம் இல்லை

இந்த வழக்கில் 2002-ம் ஆண்டில் முதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அடுத்தடுத்து 12 குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. சுமார் 12 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

‘குற்றம் சாட்டப்பட்டுள்ள 70 பேர் மீதான குற்றங்களை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாததால் 70 பேரும் விடுதலை செய்யப்படுகின்றனர்’ என்று நீதிபதி வி.கே.புஜாரா தீர்ப்பளித்தார்.

தீர்ப்பு குறித்து அரசு வழக்கறிஞர் டி.வி.தாக்குர் கூறியபோது, வழக்கில் நேரடி சாட்சிகள் மவுனமாகிவிட்டனர். வாய்மொழி சாட்சிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in