மத்திய அமைச்சக ஆவணங்கள் திருட்டு தனியார் நிறுவன ஊழியர் கைது: மேலும் ஒரு வழக்கு பதிவு

மத்திய அமைச்சக ஆவணங்கள் திருட்டு தனியார் நிறுவன ஊழியர் கைது: மேலும் ஒரு வழக்கு பதிவு
Updated on
1 min read

மத்திய அமைச்சகங்களின் ஆவணங்கள் திருடப்பட்டது தொடர்பாக மேலும் ஒரு வழக்கு பதிவாகி உள்ளது. இதில் தனியார் ஆலோசனை நிறுவன ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சகத்தின் ஆவணங்களை திருடி, தனியார் பெருநிறுவங்களுக்கு விற்பனை செய்ததாக இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் உ.பி.யின் நொய்டாவில் இருக்கும் ‘இன்ப்ராலைன் கன்ஸல்டன்ஸி’ நிறுவனத்தில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.

ஆவணங்களை எரிக்க முயற்சி

இதில் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் லோகேஷ் சர்மா என்ற அலுவலர் மத்திய நிலக்கரி மற்றும் எரிசக்தித் துறையில் திருடப்பட்ட ஆவணங்களை எரிக்கும் முயற்சியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரையும் டெல்லி போலீஸார் நேற்று கைது செய்தனர். இவர் மீது அரசு அலுவலகங்களில் அத்துமீறி நுழைந்தது, ரகசிய பாதுகாப்பு சட்டம், மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லி காவல் துறை ஆணையர் பி.எஸ்.பாஸி கூறும்போது, “இது ஆவணத் திருட்டு வழக்கில் பதிவாகி உள்ள இரண்டாவது வழக்கு ஆகும். இதில் கைதாகி உள்ள லோகேஷ், நிலக்கரி மற்றும் எரிசக்தி துறையில் ஆவணங்களை திருடியதாக தகவல் கிடைத்துள்ளது. இவருடன் மேலும் ஒரு தனியார் ஆலோசனை நிறுவனமும் இணைந்து செயல்பட்டுள்ளது. இவர்களுடன் முன்பு கைதானவர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. எனவே, லோகேஷ் மீது தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

சாஸ்திரி பவனில் சோதனை

கைது செய்யப்பட்ட லோகேஷ் அளித்த தகவலின் அடிப்படையில், சாஸ்திரி பவன் கட்டிடத்தில் இயங்கி வரும் நிலக்கரி மற்றும் எரிசக்தித் துறை அமைச்சக அலுவலகத்தில் பணியாற்றும் 6 அரசு ஊழியர்கள் மீது சந்தேகம் எழுந் துள்ளது. இதையடுத்து அவர் களிடமும் விசாரணை நடந்து வருகிறது. திருட்டு ஆவணங் களை வாங்கிய நிறுவனங்களிலும் டெல்லி போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.

கும்பல் தலைவர் பிடிபடுவாரா?

இதுவரை கைது செய்யப்பட்ட 12 பேரும் ஒரு பெரிய கும்பலின் உறுப்பினர்கள்தானே தவிர முக்கியமானவர்கள் அல்ல எனவும் கருதப்படுகிறது. எனவே இந்த கும்பலின் முக்கிய தலைவர்களை பிடிக்க பெருநிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் போலீஸார் கூறுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in