

ஹைதராபாத் உயிரியல் பூங்காவில் இருந்த ஆமையின் மீது ஏறி நின்றவாறு உள்ள தனது புகைப்படங்களை ஃபே
ஸ்புக்கில் பகிர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஃபசல் ஷேக். இவர் கடந்த ஆண்டு மே மாதம் நேரு உயிரியல் பூங்காவுக்கு சென்றபோது, அங்குள்ள விலங்குகளைப் படம் எடுத்திருக்கிறார். அப்போது அங்கு காணப்பட்ட ஓர் ஆமை மீது ஏறி நின்று படம் எடுத்து வெளியிட்டால் ஃபேஸ்புக்கில் அதிக விருப்பங்கள்(லைக்ஸ்) கிடைக்கும் என்று அவர் நினைத்துள்ளார்.
அதனால் உடனே, விலங்குகளைப் பாதுகாக்க வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் மீது தாவி குதித்துள்ளார். பின்னர் அங்கிருந்த ஆமையின் அருகே சென்று, அதன் மீது ஏறி நின்று படம் எடுத்து, அதனை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இந்தப் படத்தை கண்ட உள்ளூர் பத்திரிகை ஒன்று ஃபேஸ்புக்கில் வெளியான வியப்பான பகிர்வு என்று தலைப்பிட்டு, ஃபசல் ஷேக்கின் படத்தை வெளியிட்டது.
அந்தப் பத்திரிகையில் வெளியாகியுள்ள படத்தைப் பார்த்த வனத்துறை அதிகாரிகள், ஃபசல் ஷேக்கின் மீது புகார் அளித்தனர்.
இது குறித்து அதிகாரி கூறும்போது, "பத்திரிகை செய்தியைப் பார்த்து வனத்துறை அதிகாரிகளிடமிருந்து எங்களுக்கு புகார் வந்தது. அதன்படி அந்த நபரின் ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்து புதன்கிழமை இரவு அவரை கைது செய்தோம்.
விசாரணை நடத்தியதில் விளையாட்டு நோக்கத்தோடு படம் எடுத்து ஃபேஸ்புக்கில் லைக்குகளுக்காக பகிரவே அப்படி செய்ததாக ஃபசல் கூறினார்" என்றார் அந்த அதிகாரி.
ஃபசல் ஷேக் மீது தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தைது மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.