

முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் இறந்தது குறித்து அவரது மகன் ஷிவ் மேனனிடம் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் (எஸ்ஐடி) நேற்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து டெல்லி போலீஸார் நேற்று கூறும்போது, “சுனந்தா மரணம் குறித்து விசாரிப்பதற்காக நேரில் ஆஜராகுமாறு ஷிவ் மேனனுக்கு டெல்லி மாகர காவல் துறை ஆணையர் பி.எஸ்.பாஸி சம்மன் அனுப்பி இருந்தார். இதன் படி, மதியம் 1.20 மணிக்கு மேனன் ஆஜரானார். சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்” என்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக, சசி தரூர், அவரது உதவியாளர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் உட்பட இதுவரை 15 பேரிடம் எஸ்ஐடி விசாரணை நடத்தி உள்ளது. சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவர் அமர் சிங், மூத்த பத்திரிகையாளர் நளினி சிங் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.