Last Updated : 20 Feb, 2015 09:10 PM

 

Published : 20 Feb 2015 09:10 PM
Last Updated : 20 Feb 2015 09:10 PM

வடகிழக்கு மாநிலங்களில் வேளாண் உற்பத்தியை உயர்த்த நடவடிக்கை: பிரதமர் மோடி உறுதி

வடகிழக்கு மாநிலங்களில் வேளாண் உற்பத்தியை உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

அருணாசலப்பிரதேசம் உருவாக்கப்பட்ட தினம் இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட்டது. இதையொட்டி இம்மாநிலத் தலைநகர் இடாநகரில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது:

"வடகிழக்கு பிராந்திய வளர்ச்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. நாட்டில் பிற பகுதிகளுக்கு இணையாக இப்பிராந்தியம் வளர்ச்சிபெற நடவடிக்கை எடுக்கப்படும்.

வடகிழக்கு பிராந்தியத்தில் வேளாண்மைக்கு உகந்த சூழல் நிலவுகிறது. இங்கு வேளாண்மை, தோட்டக்கலை உற்பத்தியை அதிகரித்து, நாட்டின் வேளாண் உற்பத்தி முனையமாக இப்பிராந்தியத்தை மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதையொட்டி இப்பிராந்தியத்தில் 6 வேளாண் பல்கலைக்கழகங்கள் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இப்பிராந்தியத்தில் 18 பண்பலை வானொலி சேனல்கள் தொடங்க எனது அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இதற்கான ஏலம் தொடங்கப்படும். மேலும், இப்பிராந்தியத்தில் 2ஜி, 3ஜி, 4ஜி தொடர்பை மேம்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இப்பிராந்திய வளர்ச்சிக்கு நிதி தடையாக இருக்காது. ஆனால் மத்திய அரசின் நிதி நியாயமாகப் பயன்படுத்தப்படுவதை இங்குள்ள மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்.

நாட்டில், மக்கள் ஒருவரையொருவர் ‘ஜெய் ஹிந்த்’ என்று வாழ்த்திக்கொள்ளும் ஒரே மாநிலம் அருணாசலப் பிரதேசம் ஆகும். இங்குள்ள மக்கள் பின்பற்றும் பாரம்பரியம் நாடு முழுவதுக்கும் உந்துசக்தியாக உள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் இம்மாநிலத்தில் அதிக வளர்ச்சியை மக்கள் காணலாம். இந்த வளர்ச்சி கடந்த 28 ஆண்டுகளில் கண்டிராத வளர்ச்சியாக இருக்கும். உணவு உற்பத்தியில் சாதனை புரிந்ததற்கான விருதை இம்மாநிலத்துக்கு வழங்கும்போது நான் பெருமிதம் அடைந்தேன். அருணாசலப்பிரதேசம் வளர்ச்சி பெற்றால்தான் இந்தியா ஒளிரும். உங்களுக்காக பணியாற்றி டெல்லி அரசு எப்போதும் தயாராக உள்ளது.

இப்பிராந்திய மாணவர்கள் 1200 பேருக்கு சிறப்பு உதவித்தொகை வழங்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் இவர்கள் நாட்டின் வளர்ச்சில் பங்கேற்க முடியும்.

இப்பிராந்திய வளர்ச்சிக்கு போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு மிகப்பெரிய தடையாக உள்ளது. எனவே பல்வேறு அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. இவை விரைவில் இந்தப் பிராந்தியத்தின் முகத்தை மாற்றி அமைத்துவிடும்." இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x