முழு மத சுதந்திரத்தை எனது அரசு உறுதி செய்யும்: மோடி

முழு மத சுதந்திரத்தை எனது அரசு உறுதி செய்யும்: மோடி
Updated on
1 min read

இந்தியா மத சார்பற்ற நாடாகவே இருக்கும். மதம் தனிநபர் சுதந்திரம் சார்ந்தது. வெறுப்பை பரப்ப இங்கு யாருக்கும் அனுமதியில்லை என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மேலும், முழு மத சுதந்திரத்தை தனது அரசு உறுதி செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா முதல் அமெரிக்க பத்திரிகையின் தலையங்கம் வரை இந்தியாவில் மத நல்லிணக்கம் குறைந்து வருவதாக பேசப்பட்டது.

பிரதமர் மோடி இவ்விவகாரத்தில் மவுனம் கலைத்துப் பேச வேண்டும் எனவும் பல்வேறு தரப்புகளில் இருந்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், டெல்லியில் விக்யான் பவனில் நடந்த கிறிஸ்தவ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, "இந்தியா மத சார்பற்ற நாடாகவே இருக்கும். மதம் தனிநபர் சுதந்திரம் சார்ந்தது. வெறுப்பை பரப்ப இங்கு யாருக்கும் அனுமதியில்லை" எனக் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி பேசியதாவது:

"இந்தியா மத சார்பற்ற நாடாகவே இருக்கும். மதம் தனிநபர் சுதந்திரம் சார்ந்தது. வெறுப்பை பரப்ப இங்கு யாருக்கும் அனுமதியில்லை. மத சகிப்புத்தன்மை என்பது ஒவ்வொரு இந்தியரின் மரபணுவிலேயே இருக்க வேண்டும்.

ஒவ்வொரு மதத்தினரும் மற்ற மதத்துக்கு உரிய மதிப்பை அளிக்க வேண்டும். மத ரீதியான அத்துமீறல்கள் கூடாது. ஒவ்வொரு இந்தியரும் தனது மத நம்பிக்கையை பின்பற்றுவதில் முழு சுதந்திரம் இருப்பதை எனது அரசு உறுதி செய்யும்.

பெரும்பான்மை மதத்தினர், சிறுபான்மை மதத்தினர் மீது வெறுப்புப் பிரச்சாரத்தை வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ கட்டவிழ்த்துவிட அனுமதிக்கப்படமாட்டாது. மத ரீதியிலான பிரிவினைகள் உலகமெங்கும் அதிகரித்து வருகிறது. இது கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியது. ஒவ்வொரு மதத்திலும் உண்மை இருக்கிறது. இந்தியத் தாய் நிறைய பக்தி மார்க்கங்களையும், மத குருமார்களையும் பிரசவித்துள்ளாள். அனைத்து பக்தி மார்க்கங்களையும் வரவேற்று மரியாதை செலுத்த வேண்டும்.

இன்று, பாதிரியார் குரியகோஸ், அன்னை யூப்ரேசியா ஆகியோர் புனிதர்களாக உயர்த்தப்பட்டுள்ளனர். இத்தருணத்தில் கிறிஸ்துவர்கள் மட்டுமல்லாது இந்தியர்கள் அனைவருமே பெருமை கொள்ள வேண்டும். இந்தியா பெருமை கொள்கிறது" என்றார் மோடி.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் டெல்லியில் தேவாலயங்கள் மீது 5 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவங்களுக்குப் பிறகு கிறிஸ்தவ நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.

பிரதமர் மோடியை இந்நிகழ்ச்சிக்கு அழைத்ததில் கிறிஸ்தவ சபைகளுக்கு இடையே இருவேறு கருத்து நிலவுவதாகவும் தெரிகிறது.

ஒரு தரப்பினர், டெல்லியில் தேவாலயங்கள் மீதான தாக்குதலுக்கு பின்னர் எந்த கருத்தும் தெரிவிக்காதவரை ஏன் அழைக்க வேண்டும் என வாதிட்டதாகவும், மற்றொரு தரப்பினர் இந்த அழைப்பின் மூலம் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்பாக பிரதமர் மவுனம் கலைக்க வழிவகை ஏற்படும் என தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in