

பிஹார் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னதாகவே மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதியின் முதன்மைச் செயலர் பிரஜேஷ் மெஹ்ரோத்ரா சந்தித்த மாஞ்சி தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
முதல்வர் பதவியை, மஞ்சி ராஜினாமா செய்துள்ளதை, ஆளுநரின் முதன்மைச் செயலரும் உறுதிப்படுத்தியுள்ளார். ராஜினாமா கடிதத்தில் என்ன இருந்தது என்ற கேள்விக்கு, "ஒற்றை வரியில் ராஜினாமாவை தெரிவித்திருந்தார் மாஞ்சி" என்றார்.
காலை 11.30 மணியளவில் மாஞ்சி, அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறும்போது, "பிஹார் சட்டப்பேரவை மரபை சபாநாயகர் பின்பற்றவில்லை. அவரது நடுநிலைமையை நான் சந்தேகிக்கிறேன். எனக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ.க்கள்., அமைச்சர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். எனக்கும் கொலை மிரட்டல்கள் வந்தன. எனக்கு ஆதரவு தெரிவிக்க 140 எம்.எல்.ஏ.க்கள் தயாராக இருந்தனர். அவர்களுக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல் வந்தது. எனது ஆதரவாளர்கள் நலனுக்காகவே நான் ராஜினாமா செய்தேன். இப்போதுகூட எனக்கு நம்பிக்கை இருக்கிறது பேரவையில் பெரும்பான்மையை என்னால் நிரூபித்திருக்க முடியும் என்று. ரகசிய வாக்கெடுப்பு நடத்தியிருந்தால் நான் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பேன். ஆனால், அதற்கு சபாநாயகர் ஒப்புக்கொள்ளவில்லை. இப்போதைய சூழலில், பிஹார் அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காண மீண்டும் தேர்தல் நடத்துவதே ஒரே தீர்வாகும்" என்றார்.
நிதிஷ்குமார் கருத்து:
பிஹார் முதல்வர் பதவியை மாஞ்சி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து தனது முதல் கருத்தை பதிவு செய்த ஐக்கிய ஜனதாதளத் தலைவர் நிதிஷ் குமார் கூறும்போது, "மாஞ்சி முன்னரே பதவி விலகியிருக்க வேண்டும். பிஹார் அரசியிலில் பாஜக எண் விளையாட்டு விளையாட நினைத்தது.ஆனால், அதன் விளையாட்டு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. மாஞ்சியை வைத்து அவர்கள் தீட்டிய திட்டம் அம்பலமாகியுள்ளது. நாங்கள் கூறியது உண்மைதான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது"
சிக்கல் என்ன?
பிஹாரில் ஐக்கிய ஜனதாதள கட்சியின் சட்டப்பேரவைத் தலை வராக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார். ஆனால் முதல்வர் பதவியை மாஞ்சி ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். இதையடுத்து சட்டச்சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டார். அதன்படி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருந்தது.
இந்நிலையில் பாட்னா உயர் நீதிமன்றத்தின் உத்தரவு முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்பட்டது.
ஏனெனில், நிதிஷ் குமாருக்கு 128 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், 87 உறுப்பினர்களைக் கொண்ட பாஜக ஆதரவளித்தாலும் மாஞ்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவது கடினம்.
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி, ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்கள் 4 பேரின் பதவியைப் பறித்து சட்டப்பேரவைத் தலைவர் உத்தரவிட்டிருந்தார். இதற்கு பாட்னா உயர் நீதிமன்றத்தில் 4 பேரும் தடை உத்தரவு பெற்றனர்.
இந்நிலையில், மாஞ்சி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொண்டு வாக்களிக்க அனுமதிக்கக் கோரி 4 எம்எல்ஏக்களும் பாட்னா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் இக்பால் அகமது மற்றும் சக்ரதாரி சரண் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிபதி ஜோதி சரண் வழங்கிய உத்தரவை நிறுத்தி வைத்ததுடன், வாக்கெடுப்பில் பங்கேற்க 4 எம்எல்ஏக்களுக்கு தடை விதித்தது.
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஏற்கெனவே ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களும் அதை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளனர். மாஞ்சிக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் 12 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், 8 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி, இன்று காலை ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். ஆளுநரின் முதன்மைச் செயலாளரிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
கட்சியிலிருந்தும் ராஜினாமா:
முதல்வர் பதவியை ராஜினாமா செய்த மாஞ்சி, ஐக்கிய ஜனதா தள கட்சியிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார். இத்தகவலை, கட்சியின் செய்தித் தொடர்பாளர் தியாகி உறுதிப்படுத்தினார்.
ஆளுநர உரை ரத்து:
பிஹார் சட்டப்பேரவையின் கூட்டுக் கூட்டத்தில் நடைபெறவிருந்த ஆளுநர் உரை ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மாஞ்சியின் ராஜினாமாவைத் தொடர்ந்து, சிறப்பு நிலவரம் கருதி ஆளுநர் உரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.