

மத்திய அமைச்சகங்களில் இருந்து ஆவணங்கள் திருடப்பட்டு பெருநிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சக ஆவணங்கள் திருடப் பட்டு வெளியிடப்பட்ட விவகாரம் தொடர்பாக மேலும் இருவரை டெல்லி போலீஸார் கைது செய்துள் ளனர். இதன் மூலம் இந்த விவ காரத்தில் கைது செய்யப்பட்டவர் களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியின் சாணக்யபுரி காவல் நிலையத்தின் குற்றவியல் பிரிவு போலீஸாரால் நேற்று முன் தினம் கைதான ஐந்து பேரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து அன்று நள்ளிரவில், பத்திரிகையாளரான சாந்தானு சைக்கியா மற்றும் எரி சக்தி ஆலோசகரான பிரயாஸ் ஜெயின் ஆகியோர் கைது செய்யப் பட்டனர். இதில், சைக்கியா டெல்லி யில் பெட்ரோலியத் துறைக்காக தனியாக ஒரு செய்தி இணைய தளம் நடத்தி வருகிறார். பிரயாஸ், எண்ணெய் மற்றும் எரிசக்தி தொழில் துறைக்கான ஆலோசனை நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவர்கள் இருவரும் மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி துறையில் இருந்து திருடப்படும் முக்கிய ஆவணங்களை பெருநிறுவனங்களிடம் விலை பேசி பணமாக்கி வந்துள்ளனர்.
டெல்லியில் நாடாளுமன்றத்தின் அருகில் மத்திய அரசின் அலுவலக கட்டிடமான சாஸ்திரி பவனில் உள்ளது மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி துறை. இங்குள்ள முக்கிய ஆவணங்களை திருடி விட்டு கார் மூலம் தப்ப முயன்ற 3 பேர் டெல்லி போலீஸாரிடம் நேற்று முன்தினம் பிடிபட்டனர்.
இந்த விவகாரத்தில் இதுவரை மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர். இவர்கள் நேற்று டெல்லி யின் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் சாந்தனு சைக்கியா, பிரயாஸ் ஜெயின், ராகேஷ் குமார் (30), லால்டா பிரசாத் (36) ஆகியோரை பிப்ரவரி 23 வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இவர்களில் சகோதரர்களான லால்டா பிரசாத் மற்றும் ராகேஷ் குமார் ஆகியோர் பெட்ரோலிய அமைச்சகத்தின் பகுதிநேர அலுவலர்களாக பணியாற்றி உள்ளனர். ஆஷாராம் (58), ஈஸ்வர்சிங் (56) மற்றும் ராஜ்குமார் சௌபே (39) ஆகியோர் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
ஆஷாராம் மற்றும் ஈஸ்வர்சிங் ஆகியோரும் கடந்த சில வருடங்களாக மத்திய அமைச்சகங்களில் பகுதி நேர ஊழியர்களாக பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டுக்கு முன்னதாக பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி துறையில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் மற்றும் விலை நிர்ணயங்கள் குறித்த தகவல்கள் உள்ள ஆவணங்கள் திருடப்பட்டு தனியார் பெருநிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பட்ஜெட்டில் ஏற்படும் விலை மாறுதல்களுக்கு ஏற்றவாறு அந்த நிறுவனங்கள் அப்பொருட்களை முன்னதாக வாங்கி பதுக்கி வைத்து கொள்ளவும், முன்னதாக விற்கப்பட்டு விடுவதையும் வழக்கமாக வைத்திருந்துள்ளது.
கேமரா மூலம் சிக்கினர்
இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி போலீஸ் அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், ‘பட்ஜெட் நேரத்தில் மத்திய அமைச்சகங்களின் அலுவல கங்கள் இரவு மற்றும் விடுமுறை நாட்களிலும் வேலை செய்வது வழக்கம். எனினும் இப்போது புதிதாக பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களில் பதிவான சந்தேகத் துக்குரிய நடவடிக்கைகளை அடுத்து இந்த ஆவணத் திருடர்கள் பொறி வைத்து பிடிக்கப்பட்டனர்’ என்று தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து அமைச்சகத்தின் திருட்டு சாவிகள் போலீஸாரால் கைப்பற்றப் பட்டுள்ளன. அமைச்சகத்தின் போலியாக கையெழுத்திட்ட அடையாள அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
திருடப்பட்ட ஆவணங்களால் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் எனவும், இது பல ஆண்டுகளாக நடைபெற்று வந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
இந்த வழக்கில் அமைச்சகத்தின் அதிகாரிகள் உட்பட மேலும் பலர் வரும் நாட்களில் கைதாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.