Last Updated : 19 Feb, 2015 07:45 PM

 

Published : 19 Feb 2015 07:45 PM
Last Updated : 19 Feb 2015 07:45 PM

கடல் நீர்மட்ட அதிகரிப்பால் சுந்தரவனக்காடுகள் மூழ்கும் ஆபத்து: பல லட்சம் பேர் வெளியேறும் நிலை

மேற்கு வங்கத்திலிருந்து வங்கதேசம் வரை பரவி உள்ள சுந்தரவனக்காடுகளின் பெரும்பகுதி இன்னும் 15 முதல் 25 ஆண்டுகளுக்குள் கடலில் மூழ்கிவிடும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

ஏற்கெனவே அங்கு வாழும் போகுல் மோண்டல் இனத்தவர்கள் நெற்பயிரிட்டு வந்த 5 ஏக்கர் நிலப்பரப்பை கடல் நீர் விழுங்கிவிட்டது.

சுமார் 1 கோடியே 30 லட்சம் மக்கள் வாழும் சுந்தரவனக்காடுகள் பகுதியில் உலக சராசரியைக் காட்டிலும் கடல் நீர்மட்டம் 2 மடங்கு அதிகரித்து வருகிறது. அதுவும் விரைவு கதியில் இது நடந்து வருகிறது.

ஏற்கெனவே ஆயிரக்கணக்கான போகுல் மோண்டல் இனத்தவர்கள் வீடிழந்துள்ளனர். இந்நிலையில் சுந்தரவனக்காடுகளில் பெரும்பகுதி கடல்நீரில் மூழ்கிவிடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் இந்தியா-வங்கதேச நாடுகளுக்கு பெரும் சவால்கள் காத்திருக்கின்றன. காரணம் சுற்றுச்சூழல் பாதிப்பினால் உருவாகும் அகதிகள் மிகப்பெரிய் அளவில் புலம் பெயர வேண்டிய நிலை ஏற்படும். இதனால் இரு அரசுகளும் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளன என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இது குறித்து உலகவங்கியின் சுற்றுச் சூழல் நிபுணர் தபஸ் பால், கூறுகையில், "மிகப்பெரிய அளவிலான சூழலிய புலம்பெயர்தல் காத்திருக்கிறது.” என்றார். மேலும் உலகவங்கி இந்த நிலைமைகளை மதிப்பீடு செய்யவும் தயாரிப்புக்கு திட்டமிடவும் கோடிக்கணக்கான தொகைகளை செலவழித்து வருவதாகக் கூறினார்.

"சுந்தரவனக்காடுகள் பகுதியில் உள்ள அனைவரும் புலம்பெயர்தல் நடந்தால் மானுட வரலாற்றில் இதுவே மிகப்பெரிய புலம்பெயர்தலாக இருக்கும். அதாவது 1947-ஆம் ஆண்டு ஏற்பட்ட பிரிவினைவாத கலவரங்களின் போது சுமார் 1 கோடி பேர் நாடு விட்டு நாடு புலம்பெயர்ந்தனர். இது அதைவிடவும் பெரியதாக இருக்கும்.” என்று எச்சரித்துள்ளார்.

இது குறித்து போகுல் மோண்டல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, “கடந்த 10 ஆண்டுகளாக கடலுடன் போராடி வருகிறோம். எப்போதும் கடல்நீர் உள்ளே புகுந்தவண்ணம் உள்ளன. நிலம் மூழ்கினால் நாங்கள் அனைவரும் மரணமடைய வேண்டியதுதான்.” என்றார்.

பேரழிவுக்கு முன்பாக சுந்தரவனப்பகுதி மக்கள் தாங்களாகவே வெளியேறவும் முடியாது. காரணம், நடமாடும் புலிகள் ஒரு அச்சுறுத்தல், பிறகு சதுப்பு நிலம் என்பதால் பெரும் அளவுக்கு முதலைகளும் உள்ளன, மேலும், ராட்சத தேனீக்கள் ஓர் இடம்விட்டு இன்னொரு இடம் செல்வதும் இப்பகுதிகளில் அதிகம். கொடிய விஷப்பாம்புகளும் சகஜம்.

இங்குள்ள மாங்குரோவ் மரங்கள்தான் மேற்கு வங்கத்தையும், வங்காள நாட்டையும் பெரும் புயல்களிலிருந்து காத்து வருகிறது.

லண்டன் விலங்கியல் அமைப்பு 2013ஆம் ஆண்டு செய்த ஆய்வுகளின் படி ஆண்டுக்கு சுமார் 650 அடி கடல்நீர் உள்ளே வந்து கொண்டிருக்கிறது என்று எச்சரித்துள்ளது. இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கும் போது, சுந்தரவனக் காடுகளின் இந்தியப் பகுதிகளில் உள்ள கடற்கரைப்பகுதிகள் சுமார் 210 சதுர கி.மீ. வரை கடலரிப்புக்குட்பட்டுள்ளது. 4 தீவுகள் மூழ்கியுள்ளன, சில தீவுகள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன.

இந்திய அரசிடம் சுந்தரவனக்காடுகள் பற்றிய எந்தவிதத் திட்டமும் இல்லை,. மிகப்பெரிய அளவில் வரலாறு காணாத புலம்பெயர்வு காத்திருக்கிறது ஆனால் நம் அரசு இன்னமும் இதனை அறிந்ததாகவே தெரியவில்லை என்று உலக வன உயிரிகள் நிதியத்தைச் சேர்ந்த அனுராக் தண்டா எச்சரிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x