

இந்து சமூகத்தை ஒற்றுமைப்படுத்துவதுதான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரதானப் பணி. இதை வெறும் சொற்பொழிவு நடத்தி மட்டுமே சாதித்துவிடமுடியாது என்றார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத். கான்பூரில் நேற்று நடந்த ஆர்எஸ்எஸ் மாநாட்டில் பங்கேற்று அவர் பேசியதாவது:
ஆர்எஸ்எஸ் அமைப்பு இப்போதைய தருணத்தில் சமூகத்தின் அனைத்து தரப்பினராலும் விரும்பப்படும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது அதனிடம் மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். இதனை சாதிக்க இந்த அமைப்பை விரிவுபடுத்துவது அவசியமாகிறது.
எதற்கும் அஞ்சாத, தற்சார்புடைய, தன்னலமற்றதாக இந்து சமூகத்தை மாற்றுவதும், அதை ஒற்றுமைப்படுத்துவதும், நாட்டுக்காக வாழவும் சாகவும் தயாராக அதை உருவாக்குவதும் நமது பணி. வெறும் சொற்பொழிவுகள் மட்டும் இதற்கு போதாது. நாம் கூடுவதோடு நிறுத்திக் கொண்டு அனைத்தையும் மறந்துவிட்டோம். காவிக்கொடி தான் நமது பெருமையின் அடையாளம். நமக்கு என வலிமை உள்ளது. அதைக் கொண்டே நாம் வளர்கிறோம்.
வரலாற்றில் நாம் யாருக்கும் பின்தங்கியவர்கள் அல்ல. ஆனால் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களால் நாம் அடிமைகளாக்கப்பட்டோம். ஆர்எஸ்எஸ் கொள்கைகளில் புதியவை ஏதும் இல்லை. வழிமுறைகள்தான் புதிது. நமது நாட்டில் நாம் மொழி, ஜாதி, பிராந்தியத்தால் வேறுபட்டு நின்றாலும் பாரதத்தை தாயாக வணங்குகிறோம் என்றார் பாகவத்.
4 நாள் நடக்கும் ஆர்எஸ்எஸ் மாநாட்டில் வெளியாட்களுக்கு அனுமதி கிடையாது. பிஹார், உத்தரப்பிரதேசத்தில் நடைபெற உள்ள தேர்தலையொட்டி தொண்டர்களை தயார்படுத்துவது உள்ளிட்டவை இதில் விவாதிக்கப்பட உள்ளன.