

ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் காய்ச்சலால் அவதிப்படுகிறார்.
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றதையடுத்து டெல்லி முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் பதவியேற்க உள்ளார். அதையொட்டி பிரதமரை அவரின் இல்லத்தில் நேற்று காலையில் கேஜ்ரிவால் சந்தித்தார்.
காலை சுமார் 10.30 மணிக்குத் தொடங்கிய அந்தச் சந்திப்பு 15 நிமிடங்களுக்கு நீடித்தது. அப்போது கேஜ்ரிவாலுடன் மணிஷ் சிசோடியாவும் இருந்தார். இதற்கிடையில் காய்ச்சலால் அவதிப்பட்ட கேஜ்ரிவாலுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். சிகிச்சையில் அவருக்கு 101 டிகிரி காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.
பின்னர் டெல்லி-உத்தரப் பிரதேச எல்லையில் அமைந்திருக்கும் கவுசாம்பி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கேஜ்ரிவால் திரும்பினார். பிரதமருடனான சந்திப்பு குறித்து சிசோடியா செய்தியாளர்களிடம் பேசும்போது, "மத்தியில் பா.ஜ.க. பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளது. அதுபோலவே டெல்லியில் ஆம் ஆத்மி பெரும்பாண்மை பெற்றுள்ளது.
இதன் மூலம் டெல்லியை மிகச் சிறந்த நகரமாக்க மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது" என்றார். மேலும், டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது என்றும் சிசோடியா கூறினார்.