

ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 11 முறை தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிஎஸ்எப் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த ஜனவரி மாதத்தில் ஜம்மு, சம்பா மற்றும் கதுவா ஆகிய மாவட்ட எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 21 முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியது. இருதரப்புக்கும் இடையிலான மோதலில் 2 பிஎஸ்எப் வீரர்கள் மற்றும் பொதுமக்களில் ஒருவர் என 3 பேர் பலியாயினர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கடந்த மாதத்தில் 11 முறை தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. அடுத்த சில தினங்களிலும் இதுபோன்ற முயற்சி நடைபெறும் என உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை முறியடிக்க நாங்கள் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.