

இந்தி நடிகர் சல்மான்கான் கடந்த 2002-ம் ஆண்டு விபத்து ஏற்படுத்தியபோது, அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்று போக்குவரத்து அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.
நடிகர் சல்மான்கான் கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி, மும்பை பாந்த்ரா பகுதியில் வேகமாக கார் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியதில், சாலையோரம் நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவம் நடந்தபோது சல்மான்கான் குடிபோதையில் இருந்ததாக கூறப்பட்டது.
இந்த வழக்கு மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி தேஷ்பாண்டே முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கில் வட்டார போக்குவரத்து அலுவலத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் ஒருவர் நேற்று சாட்சியம் அளித்தார். அப்போது அவர் கூறும்போது, “சல்மான்கான் 2004-ம் ஆண்டுதான் ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளார். விபந்து நடந்தபோது (2002-ல்) அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை” என்றார்.
மேலும் சல்மான்கானின் ஓட்டுநர் உரிமம் தொடர்பான அரசுப் பதிவேடுகளையும் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
மற்றொரு சாட்சியமான போலீஸ் உதவி ஆய்வாளர் கூறும்போது, “விபத்தின்போது சல்மான்கான் மது அருந்தியிருந்தாரா என்பதை கண்டறிவதற்கு ரத்தப் பரிசோதனைக்காக ஜேஜே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நான்தான் அவரை டாக்டர் சசிகாந்த் பவாரிடம் அழைத்துச் சென்றேன்” என்றார்.
இவ்விரு சாட்சியங்களிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. தினமும் தொடர்ந்து நடைபெறும் இவ்வழக்கில் இதுவரை 20 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலரை விசாரிக்க வேண்டியுள்ளது.
முன்னதாக இந்த வழக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. வழக்கில் 17 சாட்சியங்களை விசாரித்த பிறகு, “சல்மான்கான் மரணம் விளைவிக்கும் குற்றம் புரிந்துள்ளார்” என்று குறிப்பிட்ட மாஜிஸ்திரேட், வழக்கை செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிட்டார்.
மரணம் விளைவிக்கும் குற்றத்துக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும். முன்னதாக சல்மான்கான் மீது கவனக்குறைவாக விபத்து ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கு 2 ஆண்டுகள் வரை மட்டுமே தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.