Published : 01 Feb 2015 11:04 AM
Last Updated : 01 Feb 2015 11:04 AM

ஸ்ரீசக்தி தமிழ் மாலை: தமிழர் எழுதிய இந்தி நூலுக்கு மத்திய அரசின் ரூ.1 லட்சம் பரிசு

வேற்று மொழி அறிஞர்கள் எழுதிய இந்தி நூலுக்கு மத்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒரு லட்சம் ரொக்கப் பரிசு தமிழரான எம்.கோவிந்தராஜனுக்கு கிடைத்துள்ளது.

இதுகுறித்து இந்தி் அறிஞரான கோவிந்தராஜனுக்கு மத்திய இந்தி இயக்குநரகத்தின் தலைவரும் பேராசிரியருமான கேசரி லால் வர்மா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மத்திய இந்தி இயக்குநரகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியை தாய்மொழியாகக் கொண்டிராத வேற்று மொழி அறிஞர்கள் எழுதிய இந்தி நூல்களில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ஒரு மொழி வீதம் அளிக்கப்படும் இந்த பரிசு, இந்த முறை தமிழுக்காக கிடைத்துள்ளது.

அதிலும் குறிப்பாக, தாங்கள் எழுதிய ‘ஸ்ரீசக்தி தமிழ் மாலை’ என்ற நூல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

தேசிய அளவிலான இந்த கவுரவம், எழுத்துலகில் மேலும் மேலும் ஏற்றம் பெற தங்களுக்கு ஊக்கம் அளிக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஸ்ரீசக்தி தமிழ் மாலை’ என்ற 450 பக்கங்களைக் கொண்ட அந்த நூல், வட மாநிலத்தவர்கள் இடையே தமிழ் மொழி குறித்து பிரச்சாரம் செய்யும் வகையில் எழுதப்பட்டுள்ளது. எழுத்து, சொல், இலக்கணம், இலக்கியம் மற்றும் வாக்கியம் என ஐந்து பிரிவுகளைக் கொண்ட இந்த நூலானது, தமிழ் மற்றும் இந்தி மொழி அறிந்தவர்களுக்கு ஒரு ஒப்பிலக்கண அகராதியாக பயன்படும் என்பதால் அது பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இந்தி மொழி ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற தமிழரான கோவிந்தராஜன், மொழிகளை பாலமாக்க உத்தரப்பிரதேச மாநிலத்தின் அலகாபாத் நகரில் தேசிய அளவில் உருவாக்கப்பட்ட அமைப்பான பாஷா சங்கத்தின் பொதுச் செயலாளராக உள்ளார்.

இவர் துளசி ராமாயணம், உட்ஹய்அணின் கதை உட்பட பல்வேறு தமிழ் சமய நூல்களை இந்தியில் மொழி பெயர்த்துள்ளார். உ.பி. அரசின் சார்பில் வேற்று மொழியைச் சேர்ந்த இந்தி அறிஞர்களுக்கு வழங்கப்படும் ரூ.2 லட்சம் விருது கடந்த மாதம் கோவிந்தராஜனுக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x