

உத்தர பிரதேச மாநில சிறார் சீர்திருத்த மையத்தில் இருந்து 90க்கும் அதிகமான சிறுவர்கள் தப்பி ஓடியுள்ளனர். மூன்றடுக்கு மாளிகையான இந்த மையத்தில் இருந்து தப்புவதற்கு அவர்கள் படுக்கை விரிப்புகளைக் கயிறாகப் பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு மீரட்டில் உள்ள சிறார் சீர்திருத்த மையத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. இதில் இருந்து சுமார் 91 பேர் தப்பி ஓடியதாகவும், அவர்களில் 35 பேரை திரும்ப பிடித்துவிட்டதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். தப்பிய அனைவருமே 18 வயதுக்குக் கீழானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி ஓம் பிரகாஷ் கூறும்போது, "காவலர்கள் சிறை யின் முன்பு காவல் காத்தி ருந்தார்கள். அப்போது சிறுவர்கள் கட்டிடத்தின் பின்பக்கம் உள்ள ஜன்னல் கம்பிகளை நீக்கி, படுக்கை விரிப்புகளைக் கயிறாகப் பயன்படுத்தி தப்பித்துள்ளனர். இவர்கள் அனைவரும் திருட்டு மற்றும் வழிப்பறி ஆகிய வழக்கு களில் சிக்கியவர்கள்" என்றார்.