

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நேற்று காலை நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வாயுத்தலமான ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று, ஞானபூங்கோதை தாயார் சமேத காளத்திநாதர் தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மேலும் தேர் மீது பக்தர்கள் மிளகு, உப்பு மற்றும் நாணயங்களை இறைத்து வழிபாடு செய்தனர்.
ஒரு கட்டத்தில் தேர் முன்பு பக்தர்கள் சூழ்ந்ததால், தேரை தொடர்ந்து செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே போலீஸார் தலையிட்டு, தேரோட்டம் தொடர வழி செய்தனர்.
முன்னதாக நேற்று முன்தினம் மகா சிவராத்திரியன்று இரவு 12 மணியளவில் கோயிலில் லிங்கோத்பவ தரிசனம் சிறப்பாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் தங்களை வரிசையில் காத்திருக்கச் செய்துவிட்டு, விஐபிக்களுக்கு தரிசன ஏற்பாடுகள் செய்வதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.