

எனது பெயரில் கோயில் கட்டாதீர்கள். அதற்குப் பதிலாக அந்தப் பணத்தையும், நேரத்தையும் தூய்மை இந்தியா திட்டத்துக்காக செலவிடுங்கள் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் மோடிக்கு கோயில் கட்டுப்பட்டு அதில் மோடியின் சிலை நிறுவப்பட்டுள்ளது தொடர்பான செய்திகள் சில ஊடகங்களில் வெளியாகின.
இந்த செய்தியைச் சுட்டிக்காட்டி, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் அவர் கூறியதாவது: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் எனக்கு கோயில் கட்டப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன. அச்செய்தியைப் பார்த்தேன். அது என்னை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. மேலும், எனக்கு கோயில் கட்டப்பட்டுள்ள செயலால் நான் மிகுந்த வேதனை அடைந்தேன். எனது பெயரில் கோயில் கட்டாதீர்கள் என தனிப்பட்ட முறையில் உங்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். எனக்கு கோயில் கட்டுவது இந்தியப் பாரம்பரியத்துக்கு எதிரானது. அதற்குப் பதிலாக அந்தப் பணத்தையும், நேரத்தையும் தூய்மை இந்தியா திட்டத்துக்காக செயல்படுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்தக் கோயில் இப்போது கட்டப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. கடந்த 2006-ம் ஆண்டுமுதல் இக்கோயில் உள்ளது. இங்கு மோடியின் படமும், பாரத மாதாவின் படமும் வைக்கப்பட்டிருந்தன. அண்மையில் இக்கோயிலில் மோடியின் சிலை வைக்கப்பட்டதால் மீண்டும் செய்திகளில் அடிபடத் தொடங்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையின்போது, பிரதமர் மோடி தனது பெயர் பொரிக்கப்பட்ட ஆடையை அணிந்தது மிகுந்த விமர்சனத்துக்குள்ளானது. மோடியின் ஆதரவாளர்களோ இந்த விமர்சனத்தை எப்படி எதிர் கொள்வது எனத் தெரியாமல் திணறிப் போயினர். இந்நிலையில், மோடிக்கு கோயில் கட்டி அவரது சிலையை வைத்து மக்கள் வழிபடும் செய்தி ஊடகத்தில் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், அரசியல்வாதிகளுக்கு சிலை வைத்து வணங்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் தெலங்கானா மாநிலம் கரீம் நகரில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கோயில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திறப்பு விழா நிறுத்தம்:
'மோடி கோயில்' திறப்பு விழா ரத்து செய்யப்படுவதாக அக்கோயில் கட்டுமானப் பணிகளுக்கு உதவிய ஓம் யுவா இயக்கத்தைச் சேர்ந்த ரமேஷ் உந்தாத் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தி இந்து ஆங்கில நாளிதழுக்கு ரமேஷ் உந்தாத் அளித்துள்ள பேட்டியில், "கோயில் திறப்பு விழா இன்றைக்கு நடைபெறாது. பிரதமர் தனது ட்விட்டரில் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அவருக்கு கோயில் எழுப்புவது நமது கலாச்சாரத்து எதிரானது என குறிப்பிட்டுள்ளார். இதனை நாங்களும் ஆமோதிக்கிறோம். எனவே கோயில் திறப்பு விழாவை ரத்து செய்கிறோம். மோடியின் சிலை அங்கிருந்து அகற்றப்படும். இனிமெல் இக்கோயிலில் பாரத மாதாவுக்கு மட்டுமே சிலை இருக்கும். மோடி, எங்கள் இதயங்களில் இருப்பார்" என தெரிவித்தார்.