Published : 06 Feb 2015 13:08 pm

Updated : 06 Feb 2015 17:30 pm

 

Published : 06 Feb 2015 01:08 PM
Last Updated : 06 Feb 2015 05:30 PM

திரைப்பாடம் 15: உறைந்து நிற்கும் உண்மை

15

திகில் திரைப்படங்களின் முன்னோடி சர் ஆல்பர்ட் ஹிட்ச்காக். இருபதுகளின் மவுனப் படங்கள் முதல் எழுபதுகளின் நவீனப் படங்கள் வரை 50 படங்கள் இயக்கியுள்ளார். இவரின் மிகப்பெரிய வெற்றிப்படம் சைக்கோ.

1960-ல் வெளிவந்த இந்தப் படத்தின் தாக்கம் ஹாலிவுட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவியது. குறிப்பாகக் கதாநாயகி ஷவரில் குளிக்கும்போது கொலை செய்யப்படும் காட்சி மிக மிகப் பிரபலமானதற்குக் காரணங்களாகக் கதை அமைப்பு, காட்சி அமைப்பு, கவர்ச்சி போன்றவற்றைச் சொல்லலாம்.


இந்தக் காட்சியை ரசித்து தங்கள் படங்களில் நகலெடுத்தவர்கள் பலர். இந்தப் படத்தையே சற்றேறக்குறைய மறு ஆக்கம் செய்தவர்களும் உண்டு. ‘அந்நியன்’ படம் கூட இதன் தாக்கத்தில் பிறந்ததுதான் என்றார் என் நண்பர். அவர் ‘மூடுபனி’படத்தைப் பார்த்திருக்கவில்லை. ‘அந்நியன்’ படத்தில் சைக்கோவின் தாக்கம் குறைவு. ஒரு மனதில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆளுமைகள் குடியிருப்பது என்பதைத் தவிர பெரிதாக எதுவும் இல்லை.

ஆனால் ‘அந்நியன்’ படம் வேறொரு படத்தின் முழு கட்டமைப்பு, கதாபாத்திரம் என பலவற்றை அப்படியே கொண்டது. அவரது படங்களில் ஒன்று ‘செவன்’. தலையைப் பார்சல் செய்யும் காட்சி அந்த ‘செவன்’ படத்திலிருந்தது. அப்படியே அதன் காப்பியைக் ‘காக்க காக்க’ படத்தில் பார்க்கலாம். சரி, இப்போது சைக்கோவைப் பார்க்கலாம்!

சைக்கோவைப் பற்றி எழுதுவதில் இரண்டு சவால்கள் உள்ளன. ஒன்று சஸ்பென்ஸைச் சொல்லாமல் கதையைச் சொல்ல வேண்டும். என் மருத்துவ உளவியல் பின்னணியுடன் கதையைத்துறை சார்ந்து பார்க்காமல் வெகுஜன ரசனைக்கு ஏற்ப இந்தக் கதையை எளிமையாகச் சொல்ல வேண்டும். முயல்கிறேன்.

கதாநாயகி காதலனுடன் சல்லாபிக்கும் காட்சியுடன் படம் ஆரம்பிக்கிறது. பிறகு, அலுவலகப் பணத்தைக் கையாடல் செய்து விட்டு ஓடிப்போகிறாள். கார் மாற்றிப் பணத்தைப் பதற்றத்துடன் பற்றிக்கொண்டு வெளியூர் செல்கிறாள். இரவு ஆள் அரவமில்லாத ஹோட்டலில் தங்குகிறாள்.

ஹோட்டல் முதலாளி இளைஞன் பரிவுடன் உணவு வழங்கி உபசரிக்கிறான். மனநலம் குன்றிய தாயுடன் அருகில் உள்ள பங்களாவில் தங்குவதாகக் கூறுகிறான். தாய் மகனுடன் இரைந்து பேசுவதைக் கேட்கிறாள் நாயகி. அவள் நிழல் உருவமும் ஜன்னலில் தூரத்தில் பார்க்கிறாள்.

களைப்பு நீங்க இரவில் ஷவரில் குளிக்கிறாள். அப்போது ஓர் உருவம் உள்ளே வந்து கத்தியால் அவளைக் குத்திக் கொல்கிறது. சிறிது நேரம் கழித்து முதலாளி இளைஞன் வந்து அதிர்ச்சியுற்று பிணத்தையும் அவள் உடமைகளையும் அவள் வந்த காரில் எடுத்துச் சென்று காரைப் புதை குழியில் தள்ளிவிட்டு வருகிறான்.

பணம் களவாடப்பட்டதால் நாயகியைத் தேட ஒரு தனியார் துப்பறியும் நிபுணர் அமர்த்தப்படுகிறார். அவர் நாயகியின் தங்கையையும் காதலனையும் விசாரிக்கிறார். பின் அவள் வந்த பாதையை மோப்பம் பிடித்து அதே ஹோட்டலுக்கு வருகிறார்.

விசாரணை நடத்துகிறார். அந்த இளைஞன் பதில்களில் திருப்தியில்லாமல், அவன் அம்மாவை விசாரிக்க மீண்டும் வருகிறார். அப்போது அவரையும் முகம் தெரியாத ஒரு உருவம் சரமாரியாகக் குத்திக் கொல்கிறது.

அவரும் காணாமல் போக அதே ஹோட்டலுக்குக் கணவன்- மனைவியாக வருகிறார்கள் தங்கையும் நாயகியின் காதலனும். ஹோட்டல் முதலாளியுடன் காதலன் பேச்சுக் கொடுத்துக்கொண்டிருக்க, நாயகியின் தங்கை அந்த மனநலம் குன்றிய தாயைக் காண பங்களாவுக்குத் தப்பிச் செல்கிறாள். அங்கு உண்மை தெரிய உறைந்து போகிறாள்.

மன நலம் சரியில்லாதது மகனுக்கா தாய்க்கா? இருவரில் யார் கொலையாளி? என்ன காரணம் என்பதெல்லாம்தான் சஸ்பென்ஸ். படம் பாருங்கள்!

கடைசிக் காட்சியில் ஒரு மன நல மருத்துவர் குற்றவாளியின் மனப் பிறழ்வை அனைவருக்கும் விளக்குவது நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது.

மகனுக்குத் தாய் மேல் உள்ள இடிபஸ் காம்ப்ளக்ஸ், ஒரு மனதில் இருவர் குடியிருக்கும் ஸ்பிளிட் பர்சனாலிட்டி போன்றவை முதன் முதலில் வெண்திரையில் காட்டப்பட்டது இந்தப் படத்தில்தான்.

குற்றவாளி மட்டுமல்ல படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைவருமே கடந்த காலத்தின் சுமையைச் சுமப்பவர்கள். கடந்த காலம் பின்னிய வலையிலிருந்து மீளத் துடிப்பவர்கள். அவர்களின் அத்தனை நடத்தைகளும் இந்த மீட்சிக்கான முயற்சிகள்தான். அவர்கள் புரியும் குற்றங்களுக்கும் காரணம் இவையே.

குற்றம், குற்ற உணர்வு, குற்ற உணர்வை ஈடு செய்யும் நடத்தைகள் எனப் பல அடுக்குகளில் மனித மனதைத் தெளிவாக ஆராய்ந்து கூறுகிறது இந்தத் திரைப்படம்.

இன்று சைக்கோ என்பது மலிவாகவும், ஏளனமாகவும் பயன்படுத்தப்படும் வசைச்சொல் ஆகிவிட்டது. மனப் பிறழ்வு என்பதை வரையறுப்பது எவ்வளவு கடினம்? யார் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பதைக் கூற முடியும். ஆனால் யார் மன நலம் பாதிக்கப்படாதவர் என்று கூற முடியுமா?

உடைவதற்கு முன் உள்ள பலவீனத்தை அறிந்தவர் யார்? நோயாளி என்றும் குற்றவாளி என்றும் முத்திரை பதிப்பது சுலபம். ஆனால் பாதிக்கப்பட்டவர்களைச் சுகப்படுத்துவதும் திடப்படுத்துவதும் எவ்வளவு முக்கியம்?

குடும்ப உறவுகளும், சமூகமும் தொடர்ந்து மனித மனதின் உறுதியைச் சோதனை செய்து கொண்டே இருக்கின்றன. சில மனங்கள் உறுதி இழக்கும்போது அவை ஒதுக்கியும் வைக்கப்படுகின்றன. சைக்கோ படம் திகில் படம் மட்டுமல்ல. ஒரு குற்றத்தை உளவியல் பூர்வமாக நோக்கும் முயற்சியும் கூட.

நாவலை அற்புதத் திரைக்கதையாகச் செய்ய வைத்து, மிக நுட்பமான நடிப்பை நடிகர்களிடம் வாங்கி, மிகக் குறைந்த அரங்க அமைப்பில், உயிர்ப்பான இசையுடன் மிகுந்த கலை நயத்துடன் உருவாக்கப்பட்ட திரைப்படம்.

நடிகர்களை செட் பிராப்பர்ட்டி எனப்படும் அரங்கப் பொருட்கள் போல மதிப்பார் ஹிட்ச்காக் என்று அவர் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால் படத்தைப் பார்த்தால் நடிகர்களிடமிருந்து எப்படி இப்படிப்பட்ட சூட்சம உணர்வுகளைத் திரையில் கொணர்ந்தார் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

திரைப்பாடம்சைக்கோஉலக சினிமா

You May Like

More From This Category

More From this Author